20160302

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-2




மூன்று மண்டலங்களான எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம் இவற்றை பலப்படுத்தக்கூடிய இயற்கை உணவுகள் என்ன என்ன என்ன என்பதைப்பற்றி நாம் பார்ப்போம்.
தினசரி காலையில் பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், தேங்காய்த் துருவல் அதாவது, பப்பாளிப்பழம் 300 கிராம், பேரீச்சம்பழம் 6 பழம், அத்திப்பழம் 4 பழம், தேங்காய் துருவல் 50 கிராம் இதனுடன் தினசரி ஒரு டம்ளர் பால் இதை காலை உணவாக யார் ஒருவர் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு நான் சொன்ன எலும்பு, நரம்பு, தசை மண்டலக் கோளாறுகள் அனைத்தும் முழுமையாக தீரும். என்னதான் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்தாலும் கூட முறையான உணவு இல்லாத பட்சத்தில் உடற்பயிற்சியின் பலனே கிடைக்காத சூழல் ஏற்படும். உடற்பயிற்சி செய்யக்கூடிய ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நான் சொன்ன இந்த உணவுமுறையைத் தொடர்ந்து சாப்பிடும் பொழுது எலும்பு வன்மை, நரம்பு வன்மை, தசை வன்மை கண்டிப்பாக உண்டாகும்.
காலை உணவை பெரும்பாலும் பழ உணவாகவோ, கீரை உணவாகவோ, பருப்பு உணவாகவோ, பயறு உணவாகவோ, உணவு சுழற்சி செய்கிற பொழுது இன்னும் நல்ல பலனைப் பெற முடியும். காலை உணவில் அடிப்படையில் ஒரு நாளைக்கு நான் சொன்ன பப்பாளி உணவை எடுக்கலாம். அடுத்த நாள் இரண்டு ஆப்பிள் பழத்தை நன்றாக தோல் சீவி சிறு துண்டுகளாக்கி கூடவே 10லிருந்து 20 வரை முந்திரிபருப்பு சேர்த்து சூடான பாலில் போட்டு வைத்து அதை தினசரி சாப்பிடுவது. இதை ஒரு நாள் சாப்பிடலாம். ஆப்பிள், முந்திரி, பால் கலவை காலை உணவாக எடுக்கும் பொழுது சருமம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். சதைக்கட்டு உண்டாகும், நரம்புகள் இறுகும், அதேபோல் எலும்பு நன்றாக வன்மையுறும். எலும்புக்குத் தேவையான வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைய கிடைக்கக்கூடிய சூழல் உண்டாகும். ஆக ஆப்பிள், பால், முந்திரிபருப்பு இந்தக் கலவையைப் சாப்பிடும் பொழுது மிக முக்கிய பலனைப் பெற முடியும்.
அதே போல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிபருப்பு, அக்ரூப் பருப்பு, சாரப்பருப்பு, சாலான் மிஸ்திரி, சபேத் மிஸ்ரி, வெள்ளரி விதை, பூசணி விதைஇவையனைத்தையும் சம அளவு கலந்து பொடியாக வைத்துக்கொண்டு தினசரி காலையில் பாலில் கலந்து ஒரு வேளை உணவாக சாப்பிடுவது. அல்லது இந்தப் பொடியை தோசைமாவில் ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டி கலந்து இந்த சத்தான தோசையை சாப்பிடலாம். நீங்கள் இயல்பாக சாப்பிடக்கூடிய தோசை புளிப்புத்தன்மை மட்டுமே இருக்கும். உலர்பருப்புகள் சேர்ந்த பொடியை புளிப்பு மாவில் சேர்க்கும் பொழுது அந்தப் புளிப்பு சமச்சீர் படுத்தப்படுவதனால் அது அமில உணவாக மாறாமல் சத்தான உணவாக மாறக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதனால்தான் புளிப்பு மாவில் செய்யக்கூடிய தோசையைக் கூட முடக்கத்தான் கீரையையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து தோசையாக செய்து சாப்பிடும் பொழுது அந்த புளிப்புத்தன்மை முழுமையாக சரியாகக்கூடிய தன்மை உண்டு. அதே நேரத்தில் அந்த தோசையை மருந்தாக்கக்கூடிய தன்மையை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். நான் சொன்ன உலர் பழங்களையும் நீங்கள் பயன்படுத்தும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
இன்னும் சொல்லப்போனால் காலை உணவாக முருங்கைக்கீரை கூட்டைக் கூட சாப்பிடலாம். ஒரு சிலருக்கு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடக்கூடிய பழக்கம் இருக்கும். அந்த மாதிரி இருக்கக்கூடியவர்கள் முருங்கைக்கீரை, நாட்டுக்கோழி முட்டை, மிளகு தூள் இதை சேர்த்து வைத்து தொடர்ந்து விடாமல் 48 நாட்கள் சாப்பிடுகிற பொழுது நான் சொன்ன எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசை மண்டலம் எல்லாமே முழுமையாக சரியான முறையில் கட்டப்படும். ஒரு சில மனிதர்களைப் பார்த்தோம் என்றால் நாற்பது வயது மனிதனைப் பார்க்கும்பொழுது கூட, வயது உங்களுக்கு 70 இருக்குமா? என்று கேட்கத்தோன்றும். இன்னும் ஒரு சிலருக்கு 55 வயதாகியிருக்கும், உங்களுக்கு 40 இருக்குமா? என்று கேட்கத்தோன்றும். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் அவர்களுடைய உணவுப்பழக்கம். உடலைப் பேணக்கூடிய முறைகளைத்தான் நாம் சொல்ல முடியும். ஆக இந்த மூன்று மண்டலங்களையும் ஒழுங்காகக் முறையாகக் கட்டக்கூடிய ஆண்களும் பெண்களும் நல்ல சீரான உடலமைப்பைப் பெற முடியும்.
செரிமான மண்டலம்:
இந்த மூன்று மண்டலங்கள் ஒழுங்காக முறையாக இருக்கும் பட்சத்தில் செரிமான மண்டலம் முறையாக வேலை செய்யும். நம் உடம்பிலேயே பார்த்தோம் என்றால் செரிமான மண்டலம் தான் வாய் முதல் குதம் வரை இருக்கக்கூடிய மிகப்பெரிய மண்டலம் என்று சொல்ல வேண்டும். வாயில் ஆரம்பிக்கக்கூடிய செரிமான மண்டலம் நாம் ஏதாவது சாப்பிடும் பொழுது அந்த உணவுக்கலவையோடு உமிழ்நீர் கலவையும் சேர்ந்து சில என்சைம்கள், நொதிகள் எல்லாம் சுரந்து அது உணவுப் பாதை வழியாக இறைப்பை அடைந்து அங்கு சில என்சைம்கள் சுரக்கப்பட்டு நாம் சாப்பிட்ட அந்த உணவானது நல்ல கூழாகி சத்தாக மாறி அந்த சத்து மட்டும் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு, அது சத்தாக மாற்றக்கூடிய சூழல் நடக்கும். ஆக நாம் எடுக்கக்கூடிய உணவில் இருக்கக்கூடிய சத்துப் பொருட்கள் எல்லாமே உடம்பில் சென்று முழுமையான அளவில் நிரவவேண்டும் என்றால் முறையான செரிமானத்தன்மை வேண்டும். முறையான செரிமானத்தன்மை வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த மூன்று மண்டலங்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். எலும்பு, நரம்பு, தசை யார் ஒருவருக்கு ஒழுங்காக இருக்கிறதோ அவருக்கு மட்டுந்தான் நல்ல முறையான செரிமான சக்தி இருக்கும், முறையான செரிமான சக்தி இருக்கும். முன் சொன்ன எலும்பு, நரம்பு, தசை மண்டலங்களை வலுப்படுத்தக்கூடிய இயற்கை உணவுகளை நீங்கள் தொடர்ந்து எடுக்கிற பொழுது கண்டிப்பாக செரிமான சக்தி மிக அற்புதமாக இருக்கும்.
நான் முன்பே சொன்னமாதிரி எப்பொழுது பார்த்தாலும் புளித்த மாவில் செய்த உணவுப்பொருட்கள், எண்ணெயில் வறுக்கக்கூடிய பொருட்கள், எண்ணெய்கள் கலந்த உணவுகள், நெய் கலந்த உணவுகள், பேக்கிங் உணவுகள், துரித உணவுகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கிற பொழுது கண்டிப்பாக மாவுச்சத்து மிக அதிகமாகி நம் உடம்பில் இருக்கக்கூடிய சுவாசக்குழாயிலிருந்து, உணவுக்குழாயிலிருந்து, இறைப்பையிலிருந்து கல்லீரலிலிருந்து, சிறுகுடல்-பெருகுடலிலிருந்து அனைத்தையும் கெடுக்கக்கூடிய சூழல் ஏற்படும். ஆக இன்றைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு நாம் மாவுப் பொருளை குறைத்து மற்ற பொருளை சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு நல்ல உடல் நலம் பெற முடியும்.
ஆக எல்லா நோய்களுக்குமே மூலம் என்று பார்க்கும் பொழுது நம் உடம்பில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மண்டலமான செரிமானமண்டலம். எனவே செரிமான மண்டலக்கோளாறு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நான் சொன்ன பழங்கள், கீரைகள், பருப்புகள் எல்லாமே நம் மண்டலங்களை முழுமையாக சரிசெய்யும். அதே மாதிரி செரிமானமண்டலக் கோளாறு இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் சிறுதானியங்கள் சார்ந்த உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும். சிறுதானியங்கள் என்று சொல்லப்படுகிற வரகு, திணை, குதிரை வாலி, சாமை, கம்பு, சோளம், ராகி விடாமல் தொடர்ந்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறு இருக்காது.
காலை உணவை பழஉணவாகவும், கீரை உணவாகவும் எடுத்துக்கொண்டு, மதிய உணவை சிறுதானியங்கள் அடிப்படையில் உள்ள உணவாக நாம் சாப்பிட்டு வரும்பொழுது செரிமானக்கோளாறு இல்லாத தன்மை இருக்கும். செரிமானக்கோளாறு இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து நார்ச்சத்து உள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டே வரவேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகளையும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து எடுக்கிற பொழுது கண்டிப்பாக செரிமான கோளாறு இருக்கவே இருக்காது. அதற்கு ஒரு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இஞ்சி. இஞ்சியைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரும்பொழுது செரிமானக்கோளாறும் இருக்காது அதே நேரத்தில் கை, கால் வலி அசதி, சோர்வு போன்ற பிரச்சனையும் இருக்காது. அதற்கு காரணம் என்னவென்றால் இஞ்சியில் இருக்கக்கூடிய நார்த்தன்மை, சுண்ணாம்புத்தன்மை(கால்சியம்) இந்த இரண்டும் இஞ்சியில் இருக்கிறது என்பதால்தான் இஞ்சியை ஒரு செரிமான காரியாக பயன்படக்கூடிய சூழல் உண்டு.
நாம் சில நேரங்களில் நிறைய சாப்பிட்டப்பிறகு இஞ்சி மிட்டாய், இஞ்சி முராப்பா இதெல்லாம் சாப்பிடும் பொழுது நாம் சாப்பிட்ட சாப்பாடு முறையாக செரிமானமாகக்கூடிய தன்மை உண்டு. மதிய உணவில் யார் ஒருவர் நிறைய மாவுச்சத்துள்ள பொருளை எடுக்கிறாரோ பின்னாளில் நீரிழிவு வரக்கூடிய சூழல், இதயம் சார்ந்த பிணிகள் வரக்கூடிய சூழல் இருக்கும். மதிய உணவில் மாவுச்சத்தை எந்த அளவிற்கு குறைக்கிறோமோ அது நரம்புகளுக்கு நல்லது.
சிலருக்கு நாம் சொல்லுவோம், ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்பது போல மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வரக்கூடிய சூழல் எவர் ஒருவருக்கு இருக்கிறதோ கண்டிப்பாக அவருக்கு நரம்பு தளர்வாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இன்னும் சில மாதங்களில் அவருடைய உடல்கூறு மாறப்போகிறது, வயிறு போடப்போகிறது, அதீத பருமன் உண்டாகப்போகிறது என்பதெல்லாம் அதனுடைய அறிகுறியாக இருக்கும். ஆக மதிய உணவு என்பதை நம்மை தூண்டக்கூடிய(stimulate) விசயமாக இருக்கவேண்டும். நம்மை மறுபடியும் மற்ற காரியங்களில் செயல்படக்கூடிய, மூளை சார்ந்த காரியங்கள் செயல்படக்கூடிய தன்மைக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடியதாக அந்த மதிய உணவு இருக்க வேண்டும்.
அந்த மதிய உணவு சிறுதானியங்கள் அடிப்படையில் இருக்கும் பொழுது குறிப்பாக நாம் சொல்லும் உணவு வரகு. வரகரிசியை 100 கிராம் வாங்கி சமையல் செய்தோம் என்றால் கிட்டத்தட்ட அதில் கிடைக்கக்கூடிய நார்ச்சத்து 7லிருந்து 8 கிராம் கிடைக்கும். ஆனால் அதே 100 கிராம் அரிசியை சமையல் செய்தோம் என்றால் நமக்குக் கிடைக்கக்கூடிய நார்ச்சத்து என்பது 200 மில்லி கிராம். ஆக ஒரு நாளைக்கு சராசரியாக ஆரோக்கியமாக ஒரு மனிதன் நகர்ப்புற வாழ்க்கையில் தன்னுடைய வாழ்நாளை கழிக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 2 கிராம் அளவுக்காவது நார்ச்சத்து உள்ள உணவுகள் சாப்பிட வேண்டும். ஆக 2 கிராம் அளவு நார்ச்சத்து உணவு எடுக்காத ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி அவர்களுடைய குடல் இயல்பாகவே உப்பக்கூடிய தன்மை உருவாகும்.
எந்த ஒரு மனிதனுக்கு குடல் பெரிதாக (உப்ப) ஆரம்பிக்கிறதோ, கண்டிப்பாக உடல் பெரிதாகிவிடும். உடல் உப்ப ஆரம்பித்துவிடும். ஒரு மனிதனுக்கே பார்த்தோம் என்றால் குடல் பலம் உடல்பலம் என்று சொல்லுவோம். யாருக்கு குடல் நல்ல பலமாக இருக்கிறதோ அவரிடம்தான் நம்பிக்கையைப் பார்க்க முடியும், பொறுமையைப் பார்க்க முடியும், ஒரு செயல்பாட்டை பார்க்க முடியும், குறிக்கோளை நோக்கி ஓடக்கூடிய தன்மையைப் பார்க்க முடியும். எந்த ஒரு மனிதனுக்கு குடல் பலகீனமாகிறதோ அவனுடைய உணவு சரியில்லை என்பதுதான் இங்கு நாம் சொல்ல வேண்டும். குடல் என்பது செரிமான மண்டலத்தில் வரக்கூடிய பிரதானமான ஒரு விசயம். இந்த செரிமானமண்டலம் ஒழுங்காக முறையாக செயல்படவேண்டும் என்றால் மாவுச்சத்தைக் குறைப்பது, சிறுதானியங்களை சேர்ப்பது என்ற செயலுக்கு நாம் வரவேண்டும். சிறுதானியங்களிலிருந்து அபரிமிதமான இரும்புச்சத்து, அபரிமிதமான கால்சியம், அபரிமிதமான நார்ச்சத்து. ஒரு உடம்பை கட்டமைக்கக்கூடிய செயல்களில் இந்த சத்துக்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின், நார் இந்த நான்கும் ஒழுங்காக முறையாக எந்த உணவில் கிடைக்கிறதோ அந்த ஒரு உணவுதான் ஆரோக்கியமான தேகத்திற்கு வித்திடக்கூடிய ஒரு சூழலை உண்டாக்கும். ஆக செரிமானமண்டலக் கோளாறு இல்லாமல் தினசரி உணவை நாம் செம்மைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மதிய வேளையில் எடுக்கக்கூடிய உணவு என்பது செரிமானப்பிரச்சனை இல்லாத உணவாக இருக்க வேண்டும். -தொடரும்

No comments: