20160302

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-8




உணவில் மூன்றுவகையான உணவுகளை நாம் சொல்ல முடியும். சாத்வீக உணவு, ராட்சச உணவு, தாமச உணவு என்று மூன்று வகையாக உணவுகளைப் பிரிக்கலாம்.
சாத்வீக உணவு:
சாத்வீகமான உணவு எப்பொழுதுமே மலச்சிக்கலை உண்டுபண்ணுவதில்லை, எது சாத்வீகமான உணவு என்றால் கீரைகள், பருப்புகள், இட்லி போன்ற இதமான உணவுகள், அதே போல் கருவேப்பிலை, புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு போன்ற சட்டினிகள் இவற்றையெல்லாம் சேர்க்கின்றபொழுது அது சாத்வீகமான உணவாக இருக்கும். சாத்வீக உணவை நிறைய எடுக்கிறபொழுது கண்டிப்பாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. சிறுதானியங்கள் கூட சாத்வீக உணவில்தான் வகைப்படுத்தப்படும். எனவே சிறுதானியங்களான வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற பொருட்களைத் தொடர்ந்து விடாமல் எடுக்கக்கூடிய நபர்களுக்கு மலச்சிக்கல் போன்ற நோய்கள் வருவதில்லை. சாத்வீக உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். எனவேநார்ச்சத்து இருக்கக்கூடிய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது குடல் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது, மலம் சார்ந்த பிரச்சனைகள் இருக்காது, உடம்பில் நல்ல வியர்வையைக் கொண்டுவரக்கூடிய தன்மை, வியர்வை சுரப்பிகளைத் தூண்டக்கூடிய தன்மை, கெட்ட திசுக்களை அழிக்கக்கூடிய தன்மை எல்லாமே இந்த நார்ச்சத்திற்கு உண்டு. அப்பேற்பட்ட நார்ச்சத்து உள்ள உணவுகள் மலச்சிக்கலை முழுமையாக நீக்கும். இவை அனைத்துமே நாம் சாத்வீக உணவுகளில் சேர்க்கமுடியும். இம்மாதிரியான சாத்வீக உணவு மட்டுமே எடுப்பவருக்கு தேவையில்லாத தீய பழக்கவழக்கங்கள் அவர்களிடம் சேர்வதற்கு வாய்ப்பே கிடையாது.
ராட்சச உணவு:
ராட்சச உணவு என்றால் நிறைய அசைவ பொருட்களான ஆடு, மாடு, கோழிகளிலிருந்து அத்தனையும் இதில் சேரும். தினசரி அசைவ உணவு இல்லாமல் ஒருவேளைகூட இருக்கமுடியாது என்று இருக்கின்ற மக்களுக்கு அதாவது இராட்சச உணவு எடுக்கக்கூடியவர்களுக்கு கண்டிப்பாக உடம்பில் காரச்சத்து அதிகமாகும். காரச்சத்து அதிகமாகி அதனடிப்படையில் உடம்பில் உஷ்ணநிலை உண்டாகி, அதனடிப்படையில் நரம்பு சார்ந்து சில உஷ்ணநிலை வரும் பொழுது அதற்கேற்ற சில பழக்க வழக்கங்களும் வரும். எவர் ஒருவர் ராட்சச உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருகிறாரோ அவருக்கு போதைப்பழக்கம், புகைப்பழக்கம், விடாத குடிப்பழக்கம் எல்லாம் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. ராட்சச உணவைத் தொடர்ந்து எடுக்கிற பொழுது குடல் பந்தப்பட்டு, பலகீனப்பட்டு, அமிலத்தன்மை அதிகமாகி குடல் அரிக்கப்பட்டு பல்வேறு பிரச்சனைகள் இந்த கழிவுமண்டலத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே ராட்சச உணவுகளான அசைவ உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ராட்சச உணவுகளான மாவுப் பொருட்களில் செய்யக்கூடிய உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ராட்சச உணவுகளான எண்ணெய் பதார்த்தங்கள், உடனடியாக செய்யக்கூடிய உணவுகள், தயாரிக்கப்பட்ட அதாவது இன்று பார்த்தோம் என்றால் சாதாரணமாக சப்பாத்தி, புரோட்டா, பூரி போன்ற உணவுகள் பைகளில் அடைக்கப்பட்டு வரக்கூடியதாக இருக்கிறது. இதில் preservative கலந்திருக்கும். இந்த உணவை மூன்று நாட்களுக்குள் உபயோகிக்கவும் என்று அடையாளமிட்ட உணவுகள் நிறைய வர ஆரம்பித்திருக்கிறது. அப்பேற்பட்ட உணவுகளை எடுக்கிற பொழுது கண்டிப்பாக குடல் பந்தப்பட்டு, மனம் பந்தப்பட்டு, மலச்சிக்கல் போன்ற நோய்கள் வந்து, அதற்கு அடுத்த நிலைக்கு வரக்கூடிய சில நோய்கள் அதாவது மூல நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது ராட்சச உணவுகளை அதிகமாக எடுக்கக்கூடியவர்கள், தண்ணீர் அதிகம் எடுக்காமல் வறண்ட உணவுகளாகவே சாப்பிடக்கூடிய மக்களுக்கு, அதேபோல் தூக்கத்தைத் தொலைத்தவர்களுக்கும் கண்டிப்பாக மூலம் போன்ற நோய்கள் வரும். இந்த கழிவுமண்டலத்தில் பிரச்சனை வருவதைத்தான் மூலநோய் என்று சொல்லுவோம். மூல நோயில் பல்வேறு வகைகள் உண்டு. உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம், ஆசன மூலம், செண்டு மூலம், பௌத்திரம் போன்ற பல்வேறு மூலநோய்கள் உண்டு.
நிறைய நபர்கள் இந்த உணவு சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்தாமல் கண்ட உணவுகளையெல்லாம் சாப்பிடுவது, துரித உணவுகளை சாப்பிடுவது இக்காரணங்களினால் மூலநோய் இன்று சாதாரணமாக சிறிய குழந்தைகளுக்குக்கூட இருக்கக்கூடிய நிலை உண்டு. ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுவர்களைக் கூட இந்த நோய் விட்டுவைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் maggi, pingo, உருளைக்கிழங்கில் செய்யக்கூடிய காரமான chips போன்ற உணவுகளைத் தொடர்ந்து எடுக்கக்கூடிய சிறுவர்களுக்கு வயிறு சார்ந்த நோய்களுடன் மூலநோயும் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவதிப் படக்கூடிய சிறுவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்த உணவுகள் பதப்படுத்தக்கூடிய தன்மை, அது இல்லாமல் நம் உடம்பிற்கு ஒவ்வாத 17 வகையான உப்புக்கள் சேர்த்து நல்ல சுவையாக அந்த உணவுகள் செய்யப்படுகிறது. நரம்புகளைத் தூண்டக்கூடிய அஜினோமோட்டோ போன்றவற்றை அவர்கள் சேர்ப்பதனால் சிறுவர்கள் விரும்பி சாப்பிடுகிறபொழுது, அவர்களுக்கு இப்படிப்பட்ட மூலம் வரக்கூடிய சூழல் இருக்கிறது. மூலநோய், சிறுவர்களுக்கு வருகிறபொழுது அவர்களுடைய நரம்பு மண்டலம் வெகுவாக பாதிக்கக்கூடிய தன்மை உண்டு.
கழிவுமண்டலத்தைப் பொறுத்துதான் நம்முடைய நரம்புமண்டலம் செயல்படக்கூடிய தன்மை இருக்கும். எவர் ஒருவருக்கு மலக்கழிவு ஒழுங்காக முறையாக வெளியேற்றப்படுகிறதோ அவருக்கு சிறுநீரகம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது. சிறுநீரக கற்கள் எதுவும் வராது. ஒரு மண்டலம் மற்றொரு மண்டலத்தோடு இணைப்புடையது, பிணைப்புடையது. கழிவு மண்டலம் ஒழுங்காக முறையாக செயல்படுகிற பொழுது நம் உடம்பில் எந்தக் கழிவும் இல்லாத தன்மை இருக்கும். ஒரு சில ஆண்கள், ஒரு சில பெண்களைப் பார்க்கின்ற பொழுது சுகந்த மணத்தை அவர்களிடமிருந்து நாம் சுவாசிக்க முடியும். நறுமணம் பூசி வரக்கூடிய மணம் வேறு, இயல்பாகவே இருக்கக்கூடிய மணம் வேறு. சிலர் மணமாகவே இருப்பார்கள். ஒரு சிலர் பேசும் பொழுது பார்த்தோம் என்றால் வாயெல்லாம் நாற்றம் அடிக்கக்கூடிய சூழல் இருக்கும். எதிரில் பேசுபவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேசுவதெல்லாம் இருக்கும். எனவே வயிறு சுத்தம்தான் வாய் சுத்தத்தைத் தரும். யார் ஒருவருக்கு வயிறு சுத்தமாக இருக்கிறதோ, யார் ஒருவருக்கு தேவையான அளவிற்கு அமில அளவு இருக்கிறதோ அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராது.அதிகபட்சமாக அமில அளவு இருப்பதனால் மலம் பந்தமாகியிருப்பது அதாவது மலத்தை முழுமையாக கழிக்கமுடியாமல் சிரமப்படக்கூடிய நிலை வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
மலச்சிக்கல் இருக்கிறவர்கள், கழிவுமண்டலப் பிரச்சனைகள் இருக்கிறவர்களுக்குத்தான் முகம் தெளிவாக இருக்காது. ஒருவருக்கு முகத்தெளிவு வேண்டும் என்றால் அவர்களுடைய கழிவு உறுப்புகள் அதனதன் வேலையை அதனதன்அடிப்படையில் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவது முரண்பாடு இருக்கிறபொழுது, சுணக்கம் இருக்கிற பொழுது கண்டிப்பாக முகத்தில் தேமலாக வருவது, முகத்தில் பருக்களாக வருவது எல்லாமே இந்த கழிவுமண்டலப் பிரச்சனையைத்தான் குறிக்கும். எவர் ஒருவருக்கு கழிவுமண்டலப் பிரச்சனை இருக்கிறதோ கண்டிப்பாக முகம் கறுக்கும், சருமம் சுருங்கக்கூடிய தன்மை உண்டு, நிறம் குறையக்கூடிய தன்மை எல்லாம் இருக்கும். எனவே அதெல்லாம் இல்லாத அளவிற்கு உடலை பேணவேண்டும் என்றால் உங்களுடைய கழிவுமண்டலத்தை முறையாக சரிசெய்யவேண்டும். கழிவுமண்டலப் பிரச்சனை இல்லாத அளவிற்கு உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு உணவு அடிப்படையில் மலக்கட்டு, மலச்சிக்கல் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
இந்த மலச்சிக்கலை மிக எளிமையாக போக்குவதற்கு சித்தர்கள் சொன்ன சில மருந்துகளை தாராளமாக சாப்பிடலாம். அதில் நாம் விசேசமாக சொல்லக்கூடியது உலகமறிந்த மூலிகை நிலாவரை.
நிலாவரைப் பொடி -150 கிராம்
சுக்கு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
ஓமம் -50 கிராம்
சர்க்கரை -300 கிராம்
இவை எல்லாவற்றையும் சேர்த்து பொடிசெய்து வைத்துக்கொண்டு இரவுநேரத்தில் மட்டும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பால் அருந்தக்கூடாது. இதைத் தொடர்ந்து சாப்பிடக்கூடியவர்களுக்கு மலச்சிக்கல் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது,கழிவு மண்டலம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது.
இன்னும் ஒரு சிலருக்கு சிறுநீர் சரியாக இறங்காத சூழல் இருக்கும். அந்த மாதிரி சிறுநீர் இறங்காமல் இருப்பவர்கள் வாழைத்தண்டை அரைத்து சாறுஎடுத்து விடாமல் சாப்பிடுபவர்களுக்கு கழிவுமண்டலத்தில் இருக்கக்கூடிய சிறுநீர் சார்ந்த பிரச்சனைகள் முழுமையாக சரியாகும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிவு வெளியேறும்பொழுது நுரைநுரையாக நுரைத்துவருவது,சுன்னம் மாதிரி வருவது,சிறுநீர் கடுமையான வாசனை இருப்பது என்று அந்த மாதிரியெல்லாம் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி இருப்பவர்கள் சுத்தமான சந்தனத்தை கல்லில் இழைத்து கொட்டைப்பாக்கு அளவு காலையில் சாப்பிட்டால் நன்றாக நீர் போகும். அப்படி இல்லையென்றால் சித்த மருத்துவ கடைகளில் சந்திரபிரபாவதி என்ற சந்தனம் கலந்து செய்யக்கூடிய அற்புதமான மாத்திரை கிடைக்கும். இதனை காலை மற்றும் இரவு வேளைகளிலும் இரண்டு இரண்டு மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தார்கள் என்றால் சிறுநீர் சார்ந்த பிரச்சனைகள்,நீர்சுருக்கு,நீர்கடுப்பு,நீர் எரிச்சல்,கல்லடைப்பு போன்ற கழிவுமண்டலப் பிரச்சனைகளை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை உண்டு. இந்த கழிவுமண்டலத்தை ஒழுங்குபடுத்த நிறைய மருந்துகள் இருக்கிறது.
சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய சோற்றுக்கற்றாழையில் உள்ளே இருக்கக்கூடிய ஜெல்லை எடுத்து ஏழு முறை அரிசி கழுவிய நீரில் கழுவிவிட்டு அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது கழிவுமண்டலம் சார்ந்த பிரச்சனைகள் முழுமையாக சரியாகும்.
கழிவுமண்டலத் தூண்டுதல் எப்பொழுது இருக்கும் என்றால் அதிகாலையில் எழுந்திருக்கக்கூடிய மக்களுக்கு கண்டிப்பாக கழிவுமண்டலப் பிரச்சனை இருக்காது. சாதாரணமாக ஐந்து மணிக்கு எழுந்து ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் நீர் அருந்தினால் கூட கழிவுமண்டல சுணக்கம் என்பது முழுமையாக சரியாவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதிகாலையில் மிக விரைவில் எழுந்து சிறுநடை போட்டு, சிறிது தண்ணீர் அருந்தி கழிவுமண்டலப் பிரச்சனையை முழுமையாக சரிசெய்துகொள்வதை வழக்கப்படுத்த வேண்டும்,பழக்கப்படுத்த வேண்டும்,தரமான உணவுகளை விடாமல் தொடர்ந்து உண்ணவேண்டும். அப்படி உண்ணுகிற பொழுது சிறுவராக இருந்தாலும் சரி,வாலிபராக இருந்தாலும் சரி,வயோதிகராக இருந்தாலும் சரி எவருக்குமே கழிவுமண்டலப் பிரச்சனைகள் இல்லாமல் மனம் சுத்தமாகி,மனம் தெளிவாகி,புத்தி கூர்மையாகி மிகச் சிறந்த இலக்கு நோக்கி எல்லோரும் நடை போடலாம். நீங்களும் கழிவுமண்டலத்தை கவனியுங்கள்.
-தொடரும்

No comments: