20160302

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?



ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள்









1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.








2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.



3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.



4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.



5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.



6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.



7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.



9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.



10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.



11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.



12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.



13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.



14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.



15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.










வயிற்றுப்புண் குணமாக....!!!



தேவையானவை:
* சாதிக்காய் பொடி- 50 கிராம்
* மாசிக்காய் பொடி- 50 கிராம்
* கடுக்காய் பொடி- 50 கிராம்
* மருதாணி பொடி - 25 கிராம்
இவைகளை ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு, இதில்
ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, அரை டம்ளர் சுடு தண்ணீரில்,
கலந்து, ஆற வைத்து குடிக்க,
தொண்டையிலிருந்து, குடல் பகுதி வரையில் ஏற்படும் புண்கள்
குணமாகும்.
வாய்ப்புண், ஈறுவீக்கம், பல்லரணை குணமாக....!!!!!!
2 * முன் கூறிய பொடிகளோடு,
50 கிராம் படிகாரத்தை சேர்த்திடித்து வைத்துக் கொள்ளவும்.
இதில் அரை தேக்கரண்டி எடுத்து,
அரை டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து,
வாய் கொப்பளித்துத் துப்ப,
வாய்ப்புண்கள், பல்லரணை, ஈறு வீக்கம், பல்வலி, ஈறுகளில்
இரத்தக் கசிவு போன்ற உபாதைகள் தீரும்.

சுடர் தைல எந்திரம்

திராவக வாலை எந்திரம்

செந்தூரம் செய்யும் எந்திரம்

அவி எந்திரம்

துலா எந்திரம்

பதங்க எந்திரம்

தூப எந்திரம்

மெழுகு தைல எந்திரம்

கரப்பான் தீர


ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி - 9




மலபந்தம் மனபந்தம் என்று நான் சொல்லியிருந்தேன். கழிவுமண்டலத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கிறது என்றால் அது மனதை பாதிக்கும், மனது பாதிக்கப்படுகிற பொழுது ஒரு மனிதனுக்கு மனஅழுத்தம், மனஉளைச்சல், மனவேதனை, தூக்கமின்மை போன்ற பல்வேறு மனம் சார்ந்த நிறைய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதற்குக் காரணம் கழிவுமண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்.
மனம் என்பது எதை சார்ந்தது என்று பார்க்கின்ற பொழுது, முதலில் மனம் என்பது நம் உடம்பில் எங்கு இருக்கிறது என்று இதுவரையிலும் சொல்ல இயலாத நிலை உள்ளது. மனம் என்பது அறிவு என்றுதான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் மனம் மூளையைச் சார்ந்தது. மூளை எந்த அளவிற்கு வலுவாக, திடமாக, தெளிவாக இருக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் ஒருவருடைய மனதை நாம் எடைபோட முடியும். மனம் என்பது மூளையோடு தொடர்புடையது என்ற அடிப்படையில்தான் நாம் நோக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இந்த மூளையை ஒழுங்காக முறையாக செயல்படவைக்கக்கூடிய தன்மை நம் உடம்பிலுள்ள நாளமில்லா சுரப்பிகளுக்கு உண்டு. நம் உடம்பையே முழுமையாக செயல்படுத்தக்கூடிய நிலை இந்த நாளமில்லா சுரப்பிகளுக்கு உண்டு. நரம்புமண்டலம், எலும்பு மண்டலம், தசை மண்டலம் இந்த மூன்று மண்டலங்களின் தன்மையோடு கட்டப்பட்ட உடலானது இரத்த ஓட்ட மண்டலத்தாலேயும், செரிமான மண்டலத்தாலேயும், சுவாசமண்டலத்தாலேயும் பேணப்பட்டு மலக்கழிவுகள் கழிவுமண்டலத்தால் வெளித்தள்ளப்பட்டு, அதற்கு அடுத்து அந்த உடலை நிலைகொள்ளச்செய்யும் தன்மை நாளமில்லா சுரப்பிகளுக்கும், இனப்பெருக்கமண்டலத்திற்கும்தான் உண்டு என்பதுதான் இதன் காரணமாகும்.
நாளமில்லா சுரப்பி (Endocrine glands):
நாளமில்லா சுரப்பிகள் நம் உடம்பில் நிறைய இருக்கிறது. அதில் மிக முக்கியமானது என்று பார்க்கும்பொழுது பிட்யூட்டரி சுரப்பி (Pituitary gland). இது மூளைக்கு அருகில் பீன்ஸ் மாதிரி இருக்கிற சிறு உறுப்பு. இதன் அளவு அரை கிராம் அளவிற்குத்தான் உண்டு. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான வளர்ச்சியை அதிகப்படுத்துவதுதான் இதன் தன்மை. உடல் நன்றாக வளரக்கூடிய தன்மை, உயரமாகக்கூடிய தன்மைகளை பிட்யூட்டரி சுரப்பியால்தான் அளவிட முடியும். உடலை வளர்சிதை மாற்றத்திற்குக் கொண்டுபோகக்கூடிய தன்மை பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கக்கூடிய அந்த ஹார்மோனால்தான் அது சாத்தியமாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் சார்ந்த எண்ணத்தை, விருப்பத்தைக் கொண்டுவருவதும் இந்த பிட்யூட்டரி சுரப்பிதான்.
தைராய்டுசுரப்பி:
தைராய்டு என்று சொல்லக்கூடிய சுரப்பி தைராக்ஸின் என்று சொல்லக்கூடிய ஹார்மோனை சுரக்கும். இந்த தைராக்ஸின் ஹார்மோன் குறைவாக சுரந்தாலும் அல்லது அதிகமாக சுரந்தாலும் பிரச்சனைகள் வரும். அதைத்தான் ஹைபோதைராய்டிசம் (hypothyroidism), ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism) என்று இரண்டு வகையாக சொல்லலாம்.
ஹைபோ தைராய்டிசம் (hypothyroidism):
தைராய்டு குறைவாக சுரக்கக்கூடிய தன்மை அதாவது ஹைபோ தைராய்டிசம் வந்தது என்றால் பல்வேறு பிரச்சனைகள் வரும். உடல் அசதியாக இருப்பது, சோர்வாக இருப்பது, உடல் ஊதிக்கொண்டே செல்வது, கன்னம் வீங்குவது, கால் வீங்குவது, ஒரு பத்து நிமிடம் கூட ஒரு வேலையை செய்யமுடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் வரும். மேலும் நிறைய பெண்கள் இந்தக் குறைபாட்டினால் அவதிப்படுவார்கள், அதாவது மாதவிடாய் வராமலிருப்பது, அவ்வாறு வந்தாலும் கூட அதிகமாக இருப்பது இவையனைத்தும் ஹைபோ தைராய்டிசம் இருப்பவர்களுக்கு வரும் பிரச்சனைகள்.
ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism):
தைராய்டு அதிகமாக சுரக்கக்கூடிய தன்மை அதாவது ஹைபர் தைராய்டிசம் வந்தது என்றால் மனம் சார்ந்த பிரச்சனைகள், மன ஆவேசம், மன அழுத்தம், தலைமுடி முழுமையாக கொட்டிப் போவது, கண்பார்வையில் பிரச்சனை வருவது, கழுத்து எலும்பில் வலி வருவது, முதுகெலும்பு வலிப்பது, இடுப்பு எலும்பில் வலி இருப்பது, சிறிது தூரம் கூட நடக்கமுடியாமல் இருப்பது, மூச்சுத்திணறுதல் இவையனைத்தும் ஹைபர் தைராய்டிசம் இருப்பவர்களுக்கு வரும் பிரச்சனைகள்.
தைராக்ஸின் ஹார்மோன் முறையாக சுரந்தால்தான் பெண்களுக்கு பிரச்சனையே இல்லாத சூழல் இருக்கும். பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் என்பது மாதாமாதம் முறையாக வருகிறபொழுதுதான் நல்ல பலன் இருக்கும். ஆனால் தைராக்ஸின் குறைபாடு உள்ள பெண்களுக்கு மாதாமாதம் வருவதில்லை. நம் உடம்பில் நாளமில்லா சுரப்பிகளில் தைராய்டு ஹார்மோனுக்கென்று ஒரு தனி இடம் உண்டு.
அட்ரினல் சுரப்பி (Adrenal gland):
அட்ரினல் சுரப்பியிலிருந்து (Adrenal gland) அட்ரினலின் என்ற நாளமில்லா சுரப்பி உண்டாகும். நாம் ஏதாவது சாலையைக் கடக்கின்றோம் எதிரே ஒரு பேருந்து வருகிறது, இந்தப் பேருந்து வருவதற்கு முன்னால் வேகமாக சாலையைக் கடக்கவேண்டும் என்ற எண்ணத்தை, ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய தன்மை இந்த அட்ரினலினுக்கு உண்டு. அந்த வேலையை செய்து நம் உடம்பை நீட்டிக்கச் செய்யக்கூடியத் தன்மையை இந்த அட்ரினலின் செய்யும்.
அடுத்து கணையம் சுரக்கக்கூடிய இன்சுலினைப் பற்றிப் பார்ப்போம்.
கணையம்(Pancreas):
கணையம் என்பது நம் உடம்பில் இருக்கக்கூடிய ஒரு உறுப்பு. அதில் இருக்கக்கூடிய ஆல்பா, பீட்டா திட்டுக்களில் இன்சுலின் என்று சொல்லக்கூடிய ஒரு ஹார்மோன் சுரக்கும். இந்த இன்சுலின் ஹார்மோன் என்பது ஒரு வகையான இனிப்பு நீர் என்று சொல்லலாம். ஒரு ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இன்சுலின் சுரப்பு ஒழுங்காக முறையாக இருக்கும் பொழுதுதான் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் உள்ள சக்கரை சத்துக்கள் ஒழுங்காக முறையாகப் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து நம் உடம்பில் இருக்கக்கூடிய செல்களை புத்தாக்கம் செய்கிறது. இந்த இன்சுலின் சுரப்பு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சுரக்க ஆரம்பிக்கிற பொழுது சர்க்கரை குறைபாடு வருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் ஹார்மோன் மிக முக்கியமானது. இன்சுலின் ஹார்மோன் குறைந்தது என்றால் அதிதாகம், அதிசிறுநீர், நீர் எரிச்சல், சிறுநீர் தாரைகளில் புண்ணாவது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உலகளாவிய அளவில் இன்று சர்க்கரை வியாதி இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அதில் இந்தியாதான் உலகிலேயே முதன்மையான நாடாக திகழ்கிறது. அதில் முதன்மையான இடம் தமிழ்நாட்டிற்கு உண்டு, தமிழ்நாட்டிலே சர்க்கரை வியாதிக்கான முதன்மையான இடம் சென்னைக்கு உண்டு. அந்த அளவிற்கு நம்முடைய உணவுமுறைகள் மாறிப்போன காரணத்தினால் நிறைய நபர்களுக்கு கணையம் சார்ந்த பிரச்சனைகள், இன்சுலின் போன்ற ஹார்மோன் குறைபாடுகள் மிக அதிகமாக வந்துகொண்டிருக்கிறது.
நம் உடம்பில் சுரக்கக்கூடிய ஹார்மோன்கள் எல்லாமே நம் உடம்பில் பிரதானமாக இருக்கக்கூடிய உறுப்புகளை பலப்படுத்தக்கூடிய வேலையை செய்கிறது. நம் உடம்பிலேயே மிகப் பிரதானமான உறுப்பு என்று பார்த்தோம் என்றால் மூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகம் இவைகள்தான். இவைகளைத்தான் சித்தர்கள் ராஜஉறுப்புகள் என்று சொல்வார்கள். ஒரு நோய்க்கு மருந்து கொடுத்தோம் என்றால் அந்த நோய்க்கு மருந்து கொடுப்பதை விட ராஜஉறுப்புளைப் பலப்படுத்துவதே மேல் என்று சித்தர்கள் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞானம் அடிப்படையில் உருவான நவீன மருத்துவம் நோய்க்கான அறிகுறியைக் கண்டறிந்து நோய்க்கான அறிகுறியை மட்டுமே அழிக்கக்கூடிய தன்மை இருப்பதனால்தான் ஒரு நோய் போனால் இன்னொரு நோய் வருகிறது. எப்பொழுதுமே நம் உடம்பில் இருக்கக்கூடிய பிரதான உறுப்புகள் ஒழுங்காக முறையாக ஆரோக்கியமாக இருக்கக் கூடிய பட்சத்தில் பெரிய நோய்கள் எதுவுமே வருவது கிடையாது. மூளையை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், சிறுநீரகத்தை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், கல்லீரலை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், இதயத்தை பலப்படுத்துவதும் நாளமில்லா சுரப்புகள் இதில் எந்த விதமான ஐயமும் கிடையாது. இப்பொழுது சிறுநீரகத்திற்கு வருவோம்.
சிறுநீரகம்(Kidneys):
சிறுநீரகத்தில் இரண்டுவிதமான நாளமில்லா சுரப்பிகள் உண்டு. ஒன்று எரித்ரோபாய்டின் (Erythropoietin), மற்றொன்று ரெனின் (Renin). ஒரு சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்து கழிவுமண்டல கழிவுகளை எல்லாம் முழுமையாக வெளியில் தள்ளவேண்டும் என்றால் அந்த எரித்ரோபாய்டின் என்று சொல்லக்கூடிய ஹார்மோன் மற்றும் ரெனின் என்ற சொல்லக்கூடிய ஹார்மோன்கள் முழுமையாக சுரக்கக்கூடிய கட்டத்தில் சிறுநீரகத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஒருவேளை இந்த இரண்டு ஹார்மோன்களும் பற்றாக்குறையாக இருந்தது என்றால் சிறுநீரகம் இயல்பாக இருக்கக்கூடிய அளவை விட சுருங்கிப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. சிறுநீரகத்தில் நீர்கட்டி, சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத்தைச் சுற்றி நீர் நீர்க்கோர்வை (hydronephrosis) போன்ற சிறுநீரகம் சார்ந்த வியாதிகள் சிறுநீரகம் உற்பத்தி செய்யக்கூடிய ஹார்மோன் பற்றாக்குறையால் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு கருப்பையில் (Ovary) சுரக்கக்கூடிய ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் (Estrogen). பெண்களுக்கு கருப்பையில் Estrogenஎன்று சொல்லக்கூடிய ஹார்மோன் ஒழுங்காக முறையாக சுரந்தால்தான் மாதாமாதம் ஒரு கருமுட்டை உண்டாகி அது Fallopian tube வழியாக கர்ப்பப்பைக்குச்சென்று அந்த கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய Endometriumல் செல்லக்கூடிய செல்லக்கூடிய சூழல் இருக்கும். கருசுழற்சியும் உண்டாகக்கூடிய சூழல் அங்குதான் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆக எந்த ஒரு பெண்ணுக்கு Estrogenசுரப்பு குறைவாக இருக்கிறதோ அந்தப் பெண்ணுக்கு முறையற்ற மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே இந்த Estrogen இருக்கக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து ஒரு பெண் சாப்பிடுகிற பொழுது கண்டிப்பாக நல்ல பலனைப் பெறமுடியும்.
ஆண்களுக்கு, ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு நாளமில்லா சுரப்பி எதுவென்றால் Testosterone. இந்த Testosterone என்பது ஆண்களின் விதையில் உற்பத்தியாகும். அந்த விதையை கவனமாக அடிபடாமல் பேணிப் பாதுகாக்கச் சொல்வதற்கான காரணம் என்னவென்றால் இந்த விதையில் ஒரு ஆண்மைக்கான நாளமில்லா சுரப்பி உற்பத்தியாகக்கூடியது. எந்த ஒரு ஆணுக்கு நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக முறையாக உற்பத்தியாகிறதோ அந்த ஆணுக்குத்தான் மீசை முளைக்கிறது, ஆண்மைத் தன்மை வருவது, விரைப்புத்தன்மை வருவது, நெடுநேரம் கலவியில் புணரக்கூடிய தன்மை வருவது எல்லாமே Testosterone-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த Testosterone ஒழுங்காக முறையாக சுரக்கின்ற பொழுதுதான் ஒரு ஆணுடைய விந்துவிலும் விந்தணுக்கள் தேவையான அளவு இருக்கும். விந்துவில் கிட்டத்தட்ட 60 மில்லியன் உயிரணுக்கள் இருக்கவேண்டும், அதில் வேகமாக நீந்தக்கூடிய உயிரணுக்கள் 70 சதவீதமாவது இருக்கவேண்டும். விந்தணுக்களில் சீழணுக்கள், இரத்த அணுக்கள் இவைகள் இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த சீழணுக்களும் இரத்த அணுக்களும் விந்தை முழுமையாக அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. அதுவெல்லாம் இல்லாத அளவிற்கு இருக்கவேண்டும், ஆரோக்கியமான விந்தணுக்கள் வெளிப்படவேண்டும், உடலுறவில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், அதிகநேரம் புணரவேண்டும், இரவுநேரத்தில் விந்து உமிழ்தல் இருக்கக்கூடாது என்றால் ஒரு ஆணுக்கு Testosterone ஒழுங்காக இருக்கவேண்டும், அந்த Testosterone உற்பத்தியாகக்கூடிய விதைகள் ஒழுங்காக இருக்கவேண்டும். இந்த இடத்திலும் ஒரு ஆண் தன்னுடைய ஒழுக்கநிதியை மீறும்பொழுது அதாவது அடிக்கடி சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடும் பொழுது விதைகள் சேதாரம் ஆவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. விதைகளுக்குள் varicocele தாக்குதல் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. varicocele வந்தது என்றால் விதைகளில் உற்பத்தியாகக்கூடிய Testosterone என்று சொல்லக்கூடிய ஹார்மோன் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்கின்ற எண்ணம் ஆண்களுக்கு இல்லாமல் போய்விடும், பெண்ணைப் பார்த்தாலே பயம், திருமணம் செய்வதற்கு பயம் இவ்வாறான பய உணர்வுகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எப்பொழுதுமே நாளமில்லா சுரப்பி மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஹார்மோன்களும் தேவையான அளவு தேவையான நேரத்தில் ஒழுங்காக முறையாக சுரக்க ஆரம்பித்தால்தான் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தை, நல்வாழ்வை பேண முடியும்.
சில ஹார்மோன்களில் மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாளமில்லா சுரப்பிகள் நிறைய இருக்கிறது. அதில் விசேசமாக நாம் சொல்லவேண்டும் என்றால் endorphin. ஒரு ஆணோ பெண்ணோ தனக்குப் பிடித்தவர்களோடு கலவியில் ஈடுபடுகிற பொழுது endorphinஎன்று சொல்லக்கூடிய ஹார்மோனை மூளை சுரக்கும். ஒரு இனம் புரியாத சந்தோசத்தை, இனம் புரியாத திருப்தியை ஆணுக்கும் கொடுக்கும், பெண்ணுக்கும் கொடுக்கும். இதை செய்வதும் அந்த நாளமில்லா சுரப்பிதான். அதேபோல் ஒரு பெண் கருவுற்று தாய்மையடைந்து குழந்தைப்பேறு உண்டாகி, அந்தக் குழந்தைக்கு பாலூட்டும்பொழுது இனம் புரியாத பரவசம், இனம் புரியாத இன்பத்தை தாய்க்கு தன்னுடைய குழந்தை மூலம் கொடுக்கக்கூடிய தன்மை இந்த நாளமில்லா சுரப்பிக்கு உண்டு. அதைத்தான் lactationஎன்று சொல்லுவோம். பால் அதிகமாக உற்பத்தியாவதை நிர்ணயிக்கக்கூடிய தன்மை ஹார்மோனுக்குத்தான் உண்டு, அதில் விசேசமாக நாம் சொல்வது பிட்யூட்ரி. பிட்யூட்ரி சுரப்பியிலிருந்து உண்டாகக்கூடிய நாளமில்லா சுரப்பி அதாவது prolactin ஹார்மோன் தாய்ப்பாலை அதிகப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் ஒழுங்காக முறையாக சரியான முறையில் சுரக்கிறபொழுதுதான் ஒரு ஆண் ஆணுக்கான அடையாளத்துடனும், ஒரு பெண் பெண்ணுக்கான அடையாளத்துடனும் இருக்க முடியும்.
அடுத்த இதழில் இப்பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய உணவுகளைக் காண்போம்.
-தொடரும்

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-8




உணவில் மூன்றுவகையான உணவுகளை நாம் சொல்ல முடியும். சாத்வீக உணவு, ராட்சச உணவு, தாமச உணவு என்று மூன்று வகையாக உணவுகளைப் பிரிக்கலாம்.
சாத்வீக உணவு:
சாத்வீகமான உணவு எப்பொழுதுமே மலச்சிக்கலை உண்டுபண்ணுவதில்லை, எது சாத்வீகமான உணவு என்றால் கீரைகள், பருப்புகள், இட்லி போன்ற இதமான உணவுகள், அதே போல் கருவேப்பிலை, புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு போன்ற சட்டினிகள் இவற்றையெல்லாம் சேர்க்கின்றபொழுது அது சாத்வீகமான உணவாக இருக்கும். சாத்வீக உணவை நிறைய எடுக்கிறபொழுது கண்டிப்பாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. சிறுதானியங்கள் கூட சாத்வீக உணவில்தான் வகைப்படுத்தப்படும். எனவே சிறுதானியங்களான வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற பொருட்களைத் தொடர்ந்து விடாமல் எடுக்கக்கூடிய நபர்களுக்கு மலச்சிக்கல் போன்ற நோய்கள் வருவதில்லை. சாத்வீக உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். எனவேநார்ச்சத்து இருக்கக்கூடிய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது குடல் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது, மலம் சார்ந்த பிரச்சனைகள் இருக்காது, உடம்பில் நல்ல வியர்வையைக் கொண்டுவரக்கூடிய தன்மை, வியர்வை சுரப்பிகளைத் தூண்டக்கூடிய தன்மை, கெட்ட திசுக்களை அழிக்கக்கூடிய தன்மை எல்லாமே இந்த நார்ச்சத்திற்கு உண்டு. அப்பேற்பட்ட நார்ச்சத்து உள்ள உணவுகள் மலச்சிக்கலை முழுமையாக நீக்கும். இவை அனைத்துமே நாம் சாத்வீக உணவுகளில் சேர்க்கமுடியும். இம்மாதிரியான சாத்வீக உணவு மட்டுமே எடுப்பவருக்கு தேவையில்லாத தீய பழக்கவழக்கங்கள் அவர்களிடம் சேர்வதற்கு வாய்ப்பே கிடையாது.
ராட்சச உணவு:
ராட்சச உணவு என்றால் நிறைய அசைவ பொருட்களான ஆடு, மாடு, கோழிகளிலிருந்து அத்தனையும் இதில் சேரும். தினசரி அசைவ உணவு இல்லாமல் ஒருவேளைகூட இருக்கமுடியாது என்று இருக்கின்ற மக்களுக்கு அதாவது இராட்சச உணவு எடுக்கக்கூடியவர்களுக்கு கண்டிப்பாக உடம்பில் காரச்சத்து அதிகமாகும். காரச்சத்து அதிகமாகி அதனடிப்படையில் உடம்பில் உஷ்ணநிலை உண்டாகி, அதனடிப்படையில் நரம்பு சார்ந்து சில உஷ்ணநிலை வரும் பொழுது அதற்கேற்ற சில பழக்க வழக்கங்களும் வரும். எவர் ஒருவர் ராட்சச உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருகிறாரோ அவருக்கு போதைப்பழக்கம், புகைப்பழக்கம், விடாத குடிப்பழக்கம் எல்லாம் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. ராட்சச உணவைத் தொடர்ந்து எடுக்கிற பொழுது குடல் பந்தப்பட்டு, பலகீனப்பட்டு, அமிலத்தன்மை அதிகமாகி குடல் அரிக்கப்பட்டு பல்வேறு பிரச்சனைகள் இந்த கழிவுமண்டலத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே ராட்சச உணவுகளான அசைவ உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ராட்சச உணவுகளான மாவுப் பொருட்களில் செய்யக்கூடிய உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ராட்சச உணவுகளான எண்ணெய் பதார்த்தங்கள், உடனடியாக செய்யக்கூடிய உணவுகள், தயாரிக்கப்பட்ட அதாவது இன்று பார்த்தோம் என்றால் சாதாரணமாக சப்பாத்தி, புரோட்டா, பூரி போன்ற உணவுகள் பைகளில் அடைக்கப்பட்டு வரக்கூடியதாக இருக்கிறது. இதில் preservative கலந்திருக்கும். இந்த உணவை மூன்று நாட்களுக்குள் உபயோகிக்கவும் என்று அடையாளமிட்ட உணவுகள் நிறைய வர ஆரம்பித்திருக்கிறது. அப்பேற்பட்ட உணவுகளை எடுக்கிற பொழுது கண்டிப்பாக குடல் பந்தப்பட்டு, மனம் பந்தப்பட்டு, மலச்சிக்கல் போன்ற நோய்கள் வந்து, அதற்கு அடுத்த நிலைக்கு வரக்கூடிய சில நோய்கள் அதாவது மூல நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது ராட்சச உணவுகளை அதிகமாக எடுக்கக்கூடியவர்கள், தண்ணீர் அதிகம் எடுக்காமல் வறண்ட உணவுகளாகவே சாப்பிடக்கூடிய மக்களுக்கு, அதேபோல் தூக்கத்தைத் தொலைத்தவர்களுக்கும் கண்டிப்பாக மூலம் போன்ற நோய்கள் வரும். இந்த கழிவுமண்டலத்தில் பிரச்சனை வருவதைத்தான் மூலநோய் என்று சொல்லுவோம். மூல நோயில் பல்வேறு வகைகள் உண்டு. உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம், ஆசன மூலம், செண்டு மூலம், பௌத்திரம் போன்ற பல்வேறு மூலநோய்கள் உண்டு.
நிறைய நபர்கள் இந்த உணவு சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்தாமல் கண்ட உணவுகளையெல்லாம் சாப்பிடுவது, துரித உணவுகளை சாப்பிடுவது இக்காரணங்களினால் மூலநோய் இன்று சாதாரணமாக சிறிய குழந்தைகளுக்குக்கூட இருக்கக்கூடிய நிலை உண்டு. ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுவர்களைக் கூட இந்த நோய் விட்டுவைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் maggi, pingo, உருளைக்கிழங்கில் செய்யக்கூடிய காரமான chips போன்ற உணவுகளைத் தொடர்ந்து எடுக்கக்கூடிய சிறுவர்களுக்கு வயிறு சார்ந்த நோய்களுடன் மூலநோயும் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவதிப் படக்கூடிய சிறுவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்த உணவுகள் பதப்படுத்தக்கூடிய தன்மை, அது இல்லாமல் நம் உடம்பிற்கு ஒவ்வாத 17 வகையான உப்புக்கள் சேர்த்து நல்ல சுவையாக அந்த உணவுகள் செய்யப்படுகிறது. நரம்புகளைத் தூண்டக்கூடிய அஜினோமோட்டோ போன்றவற்றை அவர்கள் சேர்ப்பதனால் சிறுவர்கள் விரும்பி சாப்பிடுகிறபொழுது, அவர்களுக்கு இப்படிப்பட்ட மூலம் வரக்கூடிய சூழல் இருக்கிறது. மூலநோய், சிறுவர்களுக்கு வருகிறபொழுது அவர்களுடைய நரம்பு மண்டலம் வெகுவாக பாதிக்கக்கூடிய தன்மை உண்டு.
கழிவுமண்டலத்தைப் பொறுத்துதான் நம்முடைய நரம்புமண்டலம் செயல்படக்கூடிய தன்மை இருக்கும். எவர் ஒருவருக்கு மலக்கழிவு ஒழுங்காக முறையாக வெளியேற்றப்படுகிறதோ அவருக்கு சிறுநீரகம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது. சிறுநீரக கற்கள் எதுவும் வராது. ஒரு மண்டலம் மற்றொரு மண்டலத்தோடு இணைப்புடையது, பிணைப்புடையது. கழிவு மண்டலம் ஒழுங்காக முறையாக செயல்படுகிற பொழுது நம் உடம்பில் எந்தக் கழிவும் இல்லாத தன்மை இருக்கும். ஒரு சில ஆண்கள், ஒரு சில பெண்களைப் பார்க்கின்ற பொழுது சுகந்த மணத்தை அவர்களிடமிருந்து நாம் சுவாசிக்க முடியும். நறுமணம் பூசி வரக்கூடிய மணம் வேறு, இயல்பாகவே இருக்கக்கூடிய மணம் வேறு. சிலர் மணமாகவே இருப்பார்கள். ஒரு சிலர் பேசும் பொழுது பார்த்தோம் என்றால் வாயெல்லாம் நாற்றம் அடிக்கக்கூடிய சூழல் இருக்கும். எதிரில் பேசுபவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேசுவதெல்லாம் இருக்கும். எனவே வயிறு சுத்தம்தான் வாய் சுத்தத்தைத் தரும். யார் ஒருவருக்கு வயிறு சுத்தமாக இருக்கிறதோ, யார் ஒருவருக்கு தேவையான அளவிற்கு அமில அளவு இருக்கிறதோ அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராது.அதிகபட்சமாக அமில அளவு இருப்பதனால் மலம் பந்தமாகியிருப்பது அதாவது மலத்தை முழுமையாக கழிக்கமுடியாமல் சிரமப்படக்கூடிய நிலை வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
மலச்சிக்கல் இருக்கிறவர்கள், கழிவுமண்டலப் பிரச்சனைகள் இருக்கிறவர்களுக்குத்தான் முகம் தெளிவாக இருக்காது. ஒருவருக்கு முகத்தெளிவு வேண்டும் என்றால் அவர்களுடைய கழிவு உறுப்புகள் அதனதன் வேலையை அதனதன்அடிப்படையில் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவது முரண்பாடு இருக்கிறபொழுது, சுணக்கம் இருக்கிற பொழுது கண்டிப்பாக முகத்தில் தேமலாக வருவது, முகத்தில் பருக்களாக வருவது எல்லாமே இந்த கழிவுமண்டலப் பிரச்சனையைத்தான் குறிக்கும். எவர் ஒருவருக்கு கழிவுமண்டலப் பிரச்சனை இருக்கிறதோ கண்டிப்பாக முகம் கறுக்கும், சருமம் சுருங்கக்கூடிய தன்மை உண்டு, நிறம் குறையக்கூடிய தன்மை எல்லாம் இருக்கும். எனவே அதெல்லாம் இல்லாத அளவிற்கு உடலை பேணவேண்டும் என்றால் உங்களுடைய கழிவுமண்டலத்தை முறையாக சரிசெய்யவேண்டும். கழிவுமண்டலப் பிரச்சனை இல்லாத அளவிற்கு உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு உணவு அடிப்படையில் மலக்கட்டு, மலச்சிக்கல் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
இந்த மலச்சிக்கலை மிக எளிமையாக போக்குவதற்கு சித்தர்கள் சொன்ன சில மருந்துகளை தாராளமாக சாப்பிடலாம். அதில் நாம் விசேசமாக சொல்லக்கூடியது உலகமறிந்த மூலிகை நிலாவரை.
நிலாவரைப் பொடி -150 கிராம்
சுக்கு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
ஓமம் -50 கிராம்
சர்க்கரை -300 கிராம்
இவை எல்லாவற்றையும் சேர்த்து பொடிசெய்து வைத்துக்கொண்டு இரவுநேரத்தில் மட்டும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பால் அருந்தக்கூடாது. இதைத் தொடர்ந்து சாப்பிடக்கூடியவர்களுக்கு மலச்சிக்கல் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது,கழிவு மண்டலம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது.
இன்னும் ஒரு சிலருக்கு சிறுநீர் சரியாக இறங்காத சூழல் இருக்கும். அந்த மாதிரி சிறுநீர் இறங்காமல் இருப்பவர்கள் வாழைத்தண்டை அரைத்து சாறுஎடுத்து விடாமல் சாப்பிடுபவர்களுக்கு கழிவுமண்டலத்தில் இருக்கக்கூடிய சிறுநீர் சார்ந்த பிரச்சனைகள் முழுமையாக சரியாகும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிவு வெளியேறும்பொழுது நுரைநுரையாக நுரைத்துவருவது,சுன்னம் மாதிரி வருவது,சிறுநீர் கடுமையான வாசனை இருப்பது என்று அந்த மாதிரியெல்லாம் இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி இருப்பவர்கள் சுத்தமான சந்தனத்தை கல்லில் இழைத்து கொட்டைப்பாக்கு அளவு காலையில் சாப்பிட்டால் நன்றாக நீர் போகும். அப்படி இல்லையென்றால் சித்த மருத்துவ கடைகளில் சந்திரபிரபாவதி என்ற சந்தனம் கலந்து செய்யக்கூடிய அற்புதமான மாத்திரை கிடைக்கும். இதனை காலை மற்றும் இரவு வேளைகளிலும் இரண்டு இரண்டு மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தார்கள் என்றால் சிறுநீர் சார்ந்த பிரச்சனைகள்,நீர்சுருக்கு,நீர்கடுப்பு,நீர் எரிச்சல்,கல்லடைப்பு போன்ற கழிவுமண்டலப் பிரச்சனைகளை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை உண்டு. இந்த கழிவுமண்டலத்தை ஒழுங்குபடுத்த நிறைய மருந்துகள் இருக்கிறது.
சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய சோற்றுக்கற்றாழையில் உள்ளே இருக்கக்கூடிய ஜெல்லை எடுத்து ஏழு முறை அரிசி கழுவிய நீரில் கழுவிவிட்டு அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது கழிவுமண்டலம் சார்ந்த பிரச்சனைகள் முழுமையாக சரியாகும்.
கழிவுமண்டலத் தூண்டுதல் எப்பொழுது இருக்கும் என்றால் அதிகாலையில் எழுந்திருக்கக்கூடிய மக்களுக்கு கண்டிப்பாக கழிவுமண்டலப் பிரச்சனை இருக்காது. சாதாரணமாக ஐந்து மணிக்கு எழுந்து ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் நீர் அருந்தினால் கூட கழிவுமண்டல சுணக்கம் என்பது முழுமையாக சரியாவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதிகாலையில் மிக விரைவில் எழுந்து சிறுநடை போட்டு, சிறிது தண்ணீர் அருந்தி கழிவுமண்டலப் பிரச்சனையை முழுமையாக சரிசெய்துகொள்வதை வழக்கப்படுத்த வேண்டும்,பழக்கப்படுத்த வேண்டும்,தரமான உணவுகளை விடாமல் தொடர்ந்து உண்ணவேண்டும். அப்படி உண்ணுகிற பொழுது சிறுவராக இருந்தாலும் சரி,வாலிபராக இருந்தாலும் சரி,வயோதிகராக இருந்தாலும் சரி எவருக்குமே கழிவுமண்டலப் பிரச்சனைகள் இல்லாமல் மனம் சுத்தமாகி,மனம் தெளிவாகி,புத்தி கூர்மையாகி மிகச் சிறந்த இலக்கு நோக்கி எல்லோரும் நடை போடலாம். நீங்களும் கழிவுமண்டலத்தை கவனியுங்கள்.
-தொடரும்

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-7

நெடுநாட்களாக நாம் பலதரப்பட்ட மருத்துவம் சார்ந்த விசயங்கள், உடல் சார்ந்த விசயங்கள், உளவியல் பூர்வமான சில விசயங்கள், உணவு சார்ந்த விசயங்களை அலசி ஆய்ந்துகொண்டிருக்கிறோம். சென்ற முறை நாம் பல்வேறு மண்டலங்கள், அதனுடைய பணிகள், அந்த மண்டலங்களில் வரக்கூடிய குறைபாடுகள், அதற்கு ஏற்புடைய உணவுகள் எல்லாவற்றையும் மிக விரிவாக பார்த்து வந்திருக்கிறோம். அந்த அடிப்படையில் இன்று நாம் கழிவு மண்டலம் பற்றி பேசப்போகிறோம்.
கழிவுமண்டலம்:
கழிவுமண்டலம் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமான ஒரு மண்டலம் என்று நாம் சொல்லவேண்டும். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்நாளை நீட்டிக்க, ஆரோக்கியமாக வாழ எந்த அளவிற்கு செரிமான மண்டலம் மிகச் சிறந்த ஒரு விசயமாகப்படுகிறதோ அதே மாதிரி ஒரு மனிதனுடைய கழிவுகளும் ஒழுங்காக முறையாக வெளித்தள்ளப்படவேண்டும். ஆக என்னதான் சத்தான ஆகாரங்கள் சாப்பிட்டாலும் கூட அதாவது ஒரு நாளைக்கு விதவிதமாக குங்குமப்பூவிலிருந்து, ஆப்பிளிலிருந்து, பேரீச்சம்பழத்திலிருந்து, அன்னாசிபழத்திலிருந்து நல்ல உயர்வான உணவுப்பொருட்களைத் தொடர்ந்து ஒரு ஆணோ பெண்ணோ சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டாலும் கூட அந்த சத்தான உணவுகளில் உள்ள கழிவுகள் ஒழுங்காக முறையாக வெளியேறக்கூடிய நிலை இருந்தால்தான் ஒரு ஆணோ பெண்ணோ ஆரோக்கியமாக இருக்கக்கூடிய சூழல் இருக்கும். ஆனால் இன்றைக்கு நம்முடைய உடல் உறுப்புகளில் உள்ள பிரச்சனைகளிலேயே இந்த கழிவுமண்டலப்பிரச்சனை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்கான காரணம் நம்முடைய வாழ்வியல் சூழல் மாறிப்போன ஒரு விசயத்தை நாம் கண்டிப்பாக அடிக்கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.
அந்த காலகட்டத்தில் பார்த்தோம் என்றால் உணவுகள் ஒழுங்காக முறையாக தரம் வாரியாக பிரிக்கப்பட்டிருந்தது. அன்றைய குடும்ப அமைப்பில் சிறுவர்களுக்கு என்ன உணவு?, வாலிபர்களுக்கு என்ன உணவு?, தோட்டம் மற்றும் காடுகளில் வேலைசெய்யக்கூடிய ஆண்களுக்கு என்ன உணவு?,வீட்டிலேயே குடும்பத் தலைவியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு என்ன உணவு? இப்படியெல்லாம் அவர்களுடைய வேலையின் திறன் அறிந்து உணவுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தது.
உதாரணமாக சிறுவர்களுக்கு சாதாரணமாக பருப்பு, அரிசி, மிளகு, சீரகம் சேர்த்து கஞ்சி மாதிரியான உணவுகளைக் கொடுத்து வந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுடைய வாழ்வியலில் பார்க்கிற பொழுது இந்த பருப்பு அரிசி கஞ்சி பிரதானமான காலை உணவாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு சூழல் இருந்தது.
அதே போல் வாலிபர்களாக இளைஞர்களாக இருக்கக்கூடிய ஆண்களுக்கு அதை விட திடமான சில உணவுகள் அதாவது பருப்போடு கீரையும் கொடுத்து வந்திருக்கிறார்கள். சில பருப்புகளான மொச்சைக்கொட்டை, காராமணி போன்ற பருப்புகளையும் வாலிபவயதில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் உணவுகளாக அவர்கள் தந்து வந்திருக்கிறார்கள். அதேமாதிரி வேலைக்கு செல்லக்கூடிய ஆண்களுக்கு முப்பது வயது மற்றும் முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு களியை அதாவது கேழ்வரகு களி, கம்மங்களி, சோளக்களி, வெந்தயக்களி, உளுத்தங்களி இப்பேற்பட்ட களிகளை காலை உணவாகவும், மதிய உணவாகவும் வழங்கப்பட்டு வந்தது.
அதே காலகட்டத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கு திரவநிலையில் இருக்கக்கூடிய உணவுகள் வழங்கப்பட்டது அதாவது பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. களி என்பது திட உணவு. சிறுதானியங்களில் களி செய்வார்கள். ஆண்களுக்கு களியைக் கொடுத்தது போக மீதமுள்ள களியில் சாதம் வடித்த தண்ணீரில் அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். வீட்டிலிருந்து உணவு தயாரிக்கக்கூடிய பெண்கள், நிர்வாகம் செய்யக்கூடிய பெண்கள் அந்தக் களியை கரைத்து பழையசோறுடன் சேர்த்து கூழாகக் குடிப்பார்கள். ஆக வீட்டில் இருப்பவர்களுக்கு வேலைத் திறன் குறைவாக இருக்கும். அவர்களுடைய கலோரித்திறன் குறைவாக இருப்பதனால் அவர்களுக்கு கூழ் கொடுக்கப்பட்டது.
வேலைக்கு செல்லக்கூடிய ஆண்களுக்கு திட உணவு தேவை. ஏனென்றால் மண்வெட்டி பிடித்து விவசாய வேலை பார்ப்பது, தோட்டவேலை பார்ப்பது, ஏர் உழுவது, சுமை இழுப்பது, சுமை சுமப்பது போன்ற கடினமான வேலைகள் செய்வதனால் அவர்களுக்கு கடினமான உணவு வழங்கப்பட்டது. அதே மாதிரி இளைஞர்களைப் பற்றியும் யுவதிகளைப் பற்றியும் பேசும் பொழுது பருப்போடு சேர்ந்து கீரையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது. பருப்பில் இளைஞர்களுக்கு நல்ல ஊட்டம் தரக்கூடிய, ஊக்கம் தரக்கூடிய புரதச்சத்துக்கள் உள்ளன. பயறுகளான காராமணி, கொண்டக்கடலை, மொச்சைக்கொட்டை மற்றும் பருப்புகளான துவரம்பருப்பு, மொச்சை, பச்சை மொச்சை, பச்சை துவரை இவையெல்லாம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கொடுத்ததினால் அவர்களுக்கும் நல்ல ஊக்கம், வலிமையான உடல்நிலை அவர்களுக்கு இருந்தது. குழந்தைகளுக்கு வயிறைக் கெடுக்காத அளவிற்கு பருப்பு அரிசி போட்ட கஞ்சியை காலை உணவாக, மதிய உணவாக இரவுநேரத்தில் மெதுவான மெதுஅப்பம் என்று சொல்லக்கூடிய இட்லி, வார்ப்பப்பம் என்று சொல்லக்கூடிய தோசை இவை சிறுகுழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இப்படியெல்லாம் இருந்ததினால் அவர்கள் முழுமையாக ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள்.
ஆனால் இன்று மாறிவந்த காலச்சூழல், பணி, இடம்பெயர்வு போன்ற காரணங்களினால் நம்முடைய உணவு முறை மாறியுள்ளது. ஒரு குடும்பம் என்றால் ஒரே வகையில் பிரிக்கப்பட்டது. அதாவது சிறிய வயதிலிருந்து பெரியவயதுவரை எத்தனை வகைப்பட்ட ஆட்கள் இருந்தாலும் கூட எல்லோருக்கும் ஒரே வகையான உணவாகப் பிரிக்கப்பட்டது. சில உணவுகளை நாம் நிறைய எடுக்கக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டோம். நிறைய அரிசி கலந்த உணவுகள், மாவு கலந்த உணவுகள், எண்ணெய் கலந்த உணவுகள், செயற்கை உணவுகள், ஒரு உணவில் விரைவில் பூஞ்சை வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக ரசாயனப் பொருட்கள் சேர்க்கக்கூடிய சில உணவுகள் எல்லாமே எடுக்கக்கூடிய காலகட்டம் இருக்கிறதால் நம்முடைய கழிவுமண்டலம் ஒழுங்காக வேலை செய்கிறதா? என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
கழிவு என்பது மிகக்குறைவாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவுகளில் கழிவு என்பது மிக அதிகமாக இருக்கிறது. ஒரு ஆணோ பெண்ணோ மலச்சிக்கல் இல்லாமல் இருக்கிறபொழுதுதான் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதாக நாம் சொல்லலாம். அதாவது பழைய சித்த மருத்துவ நூல்களிலே சொல்வார்கள் மலம் என்பது புழுக்கை, புழுக்கையாக வெளியேற வேண்டும் என்று, அதாவது மலம் என்பது மலவாயில் ஒட்டக்கூடாது. இன்றைக்கும் பறவைகளைப் பாருங்கள், சில பறவைகள் எச்சம் இடுகின்றன. அந்த மாதிரி எச்சம் ஒட்டாது. ஆடு புழுக்கை போடும், வெறும் புல்லையும், இலை-தழைகளையும் சாப்பிடக்கூடிய ஆடு புழுக்கையாகப் போடும்போது மலவாயில் ஒட்டுவது கிடையாது. அதேமாதிரிதான் ஒரு மனிதனுக்கும் மலவாயில் ஒட்டக்கூடாது. எந்த மனிதனுக்கு மலவாயில் மலம் ஒட்டுகிறதோ அவனுக்கு கழிவுமண்டலப்பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். இன்றைக்கு நம்மை சார்ந்து இருக்கக்கூடிய நாயை எடுத்துக்கொண்டாலும் சரி, பூனையை எடுத்துக்கொண்டாலும் சரி, ஏன் காகம் எடுத்துக்கொண்டாலும் சரி, இவை அனைத்துமே நம்மைப்போலவே மலம் கழிக்க ஆரம்பித்துவிட்டன. ஏனென்றால் நம்மை சார்ந்து இருக்கக்கூடிய ஜீவராசிகளையும் மனிதன் கெடுத்துக்கொண்டிருக்கிறான் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.
மலச்சிக்கல் ஒரு மனிதனுக்கு இருந்தது என்றால் கண்டிப்பாக உடலில் பல பந்தம் வரும். அதனால்தான் நாம் சொல்வோம் மலபந்தம் மனபந்தம் என்று. ஆக ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்றால் தீர்க்கமான சிந்தனைக்கு நாம் வரமுடியாது. ஆக மலம் சிக்கலில்லாமல் இருக்கவேண்டும் என்றால் உணவுகளை தேர்ந்தெடுத்து ஒழுங்காக முறையாக எடுக்கும் பொழுது மலச்சிக்கல் இல்லாத சூழல் உண்டாகும். மலச்சிக்கல் கழிவுமண்டலப் பிரச்சனையில் இருந்தது என்றால் நம்முடைய படைப்புத்திறன் அதிகமாக குறையக்கூடிய வாய்ப்பு உண்டு. நல்ல எண்ணம் எந்த மனதில் இருந்து உதிக்கும் என்றால் கழிவுமண்டலப் பிரச்சனை இல்லாத ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோதான் நல்ல எண்ணங்கள் உதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. நிறைய காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பித்தம் அதிகரித்த நிலை, குழப்பமான மனநிலை, பதற்றமான நிலை, மன உளைச்சல் ஆகக்கூடிய நிலை, கோபப்படக்கூடிய நிலை எல்லாமே கழிவுமண்டலப் பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இந்த மாதிரி விசயங்கள் ஏற்படுவதற்கான ஒரு சூழல் இருக்கிறது.
பண்டைய காலத்தில் எடுக்கப்பட்டமாதிரியான உணவுகளை ஆணோ, பெண்ணோ சிறுவர்களோ, வயதானவர்களோ இவர்களெல்லாம் தனக்கேற்றமாதிரி உணவுகளைத் தேர்ந்தெடுத்து எடுக்கிறபொழுது செரிமான மண்டலம் ஒழுங்காக முறையாக வேலை செய்யும். செரிமானமண்டலம் ஒழுங்காக முறையாக வேலை செய்து முழுமையாக செரித்து அந்த உணவில் உள்ள சத்துக்களையெல்லாம் இரத்தத்தில் தாதுக்களாக பிரிக்கப்பட்டு இரத்தத்தில் சேர்ந்து ஒழுங்கான முறையில் உடலெல்லாம் நிரவப்பட்டது என்றால் கண்டிப்பாக பிரச்சனை இருக்காது. செரிமானமண்டலம்தான் கழிவுமண்டல வேலையில் முரண்பாடு உண்டாவதற்கு காரணமாக அமைகிறது. எவர் ஒருவருக்கு செரிமானக்கோளாறு பிரச்சனை இருக்கிறதோ அவருக்கு நரம்பு பிரச்சனை, வாய்வுத்தன்மை, அமிலத்தன்மை, மலப்பிரச்சனைகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலம் எதுவென்று பார்த்தால் உணவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காமல் உண்பதுதான். ஆக எப்பொழுதுமே உணவில் மிதமான உணவை எடுத்துப் பழகவேண்டும்.
-தொடரும்

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் - பகுதி - 6

நம் சுவாசமண்டலம் பற்றி சற்று... “காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்று பட்டினத்தார் கூறுயிருக்கிறார். ஆக காயம் என்பது உடல், இந்த உடல் நிலைப்புத் தன்மை உடையதல்ல. நிலையாமை தத்துவத்தை உணர்த்தக்கூடிய ஒரு பொருள் எதுவென்றால் நம்முடைய உடம்பு என்றுதான் நாம் சொல்ல வேண்டும். காற்றடைத்த பையடா என்றால் ஒரு பையில் காற்று இருந்தால்தான் பைக்கு மதிப்பு, காற்றே இல்லையென்றால் ஒரு சறுகு மாதிரி போய்விடும். அதே போல் நம் உடம்பில் சுவாசம் ஒழுங்காக, சீராக, முறையாக இருக்கும் பொழுதுதான் மனிதன் மனிதனாக இருக்கிறான். உடம்புக்குள்ளே சீவன் என்கிற சிவம் இருக்கும் வரைதான் நாம் சீவனோடு இருக்கமுடியும். அந்த சீவன் என்ற சிவம் இல்லாத பொழுது நாம் சவமாக மாறிவிடுகிறோம் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு சுவாசம் என்பது மிக முக்கியமான ஒரு பகுதி.

நாம் ஏற்கனவே எலும்பு, நரம்பு, தசை இம்மூன்றும் ஒரு தொகுப்பு, இந்த மூன்றும் ஒழுங்காக இருக்கிற பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான உடலமைப்பு கிடைக்கும் என்று நாம் பேசியிருந்தோம். அதே போல் செரிமான மண்டலத்திற்கும் இரத்த ஓட்ட மண்டலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் நாம் பேசியிருந்தோம். செரிமான மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் கூடவே சுவாச மண்டலம் இந்த மூன்றுக்குமான தொகுப்பும் மிக முக்கியமானது. இந்த மூன்றும் ஒருகோட்டுப் பாதையில் உள்ளது என்று சொல்ல வேண்டும். செரிமான மண்டலத்திற்கும் இரத்த ஓட்டமண்டலத்திற்கும் சுவாச மண்டலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு உணவுப்பொருளை ஒழுங்காக முறையாக செரிக்கவைக்கவேண்டும் என்றால் சுத்தமான காற்று வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படும். பிராணசக்தி இருக்கிற பொழுதுதான் உணவுப்பொருள் ஊட்டமானப் பொருளாக மாறும். பிராணசக்தி அதிகமாக இருக்கக்கூடிய உணவுகள் என்னவென்றால் சமைக்காத பச்சைக்காய்கறிகள், கீரைகள் இவற்றை எடுக்கக்கூடிய நபர்களுக்குத்தான் பிராணசக்தி அதிகமாகும்.
பிராணசக்தி என்பது பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று. இந்தக் காற்றை ஒழுங்காக முறையாக இயக்கப்பழகுவது என்பது சுவாச மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். தினசரி அதிகாலை 4.30 மணியளவில் துயில் எழக்கூடிய பழக்கம் இருக்கிறது என்றால் பல்லாயிரக்கணக்கான நோய்களை நாம் ஓட ஓட விரட்ட முடியும். தூக்கம் என்பதே ஒரு வியாதி. தூங்காமல் தூங்கி சுகம்பெறும் நாள் எந்நாளோ என்று சித்தர்கள் கூறுவார்கள். ஒரு சராசரி மனிதனுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால் ஒரு சித்தனுக்கு ஐந்து நிமிடம் போதும் அல்லது பத்து நிமிடம் போதும். அவர்கள் தமது உடம்பை புதுப்பிப்பதற்கு ஏற்ற உடல்வாகு, உடல் கூறு மாறியிருக்கும். அதிகாலை தூக்கத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. படைப்பாற்றல் அதிகமாகக்கூடிய தன்மை அதிகாலையில் இருக்கும். அதிகாலையில் பார்த்தோம் என்றால் நல்ல சுவாசம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். நீங்கள் பிராணாயாமம் செய்ய வேண்டாம், மூச்சு பயிற்சி செய்ய வேண்டாம். அதிகாலையில் எழுந்து அதிகாலைக்காற்றை நன்றாக ஆழ்ந்து உள்மூச்சு வாங்கி சுவாசம் செய்கிற பொழுது நம்முடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், சீராகும், நுரையீரல் பலமாகும். எவரொருவர் 4.30 மணிக்கு எழுந்து 6.00 மணிவரையிலும் சுவாசாஅப்பியாசங்களை மேற்கொள்கிறாரோ அவருடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், முறையாகும், சீராகும், சுவாசப்பை நல்ல வலுவாகும், அதேபோல் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய சில அசுத்த சக்திகள் முழுமையாக போகக்கூடிய தன்மை உண்டு. சிலநேரங்களில் மது, புகை, போதை என்று மயக்கத்திலேயே இருக்கக்கூடிய ஆண்கள் அதிகம் உண்டு. இவர்கள் அனைவரும் கண்டிப்பாக காலையில் எழுந்தே பார்த்திருக்க மாட்டார்கள், இவர்களால் அதிகாலையில் எழுந்திருக்கவே முடியாது. அதிகாலையில் எழுந்து காரியங்களை செய்யக்கூடிய நபர்களுக்கு கண்டிப்பாக சுவாச மண்டலப் பிரச்சனைகள் சரியாகும். நம் முன்னோர்கள் நாடிசுத்தி பண்ணுவது, பிராணாயாமம் பண்ணுவது, பஸ்திரிகா பண்ணுவது, கபால்பதி பண்ணுவது போன்ற சுவாசப் பயிற்சிகளை ஏன் மேற்கொண்டார்கள் என்றால் சுவாச மண்டலத்தை வலுப்படுத்துவதற்காகத்தான்.
சுவாச மண்டலம் என்பது நம்முடைய நுரையீரலைக் குறிக்கும். நுரையீரல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கவேண்டும் என்றால் அதுசார்ந்த உணவுகளை மேற்கொண்டு சுவாசமண்டலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்துகொள்ள முடியும். சுவாசமண்டலத்தை ஒழுங்குபடுத்தக்கூடிய சில மூலிகைகளைப் பற்றி நாம் பார்ப்போம்.
சிறப்பாக நாம் சொல்லவேண்டுமென்றால் தூதுவளை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை இந்த மூலிகைகள் அனைத்துமே சுவாச மண்டலக்கோளாறுகளை முழுமையாகப் போக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு. சில வீடுகளில் தூதுவளையை துவையலாக நாம் அரைப்பது உண்டு. தூதுவளையை முள் நீக்கி லேசாக நெய் சேர்த்து வதக்கி அதைத் துவையலாக அரைத்து சாப்பிடும்பொழுது சளி, இருமல், கபம், தலைவலி, தலைபாரம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் தீரக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. தமிழில் ஒரு பழமொழி உண்டு “தூதுளை மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் கலங்கம் இல்லை”. மார்புதான் இந்த சுவாச மண்டலத்தின் மூலஸ்தானம். ஆக நுரையீரலை வலுப்படுத்தக்கூடிய தன்மை தூதுவளைக்கு உண்டு. இந்தத் தூதுவளையை விடாமல் தொடர்ந்து சாப்பிட்டு வரக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் நுரையீரல் சார்ந்த, சுவாசம் சார்ந்த, மூச்சு சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும் என்று இந்தப் பழமொழியில் கூறியிருப்பார்கள். அதேபோல் மாதுளை சாப்பிடுபவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சனைகள், மலச்சிக்கல், சீதபேதி இவையனைத்தும் சரியாகும் என்பது அந்தப் பழமொழியின் உட்கருத்து. ஆக தூதுவளை, துளசி, ஆடாதொடா இம்மூன்றையும் சமஅளவு கலந்து வைத்துக்கொண்டு அதைத் தேனில் காலை மற்றும் இரவு என்று இரண்டுவேளையும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது சுவாசமண்டலம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும்.
நம் உணவில் இரண்டு வகை உண்டு. ஒன்று அமில உணவுகள் (acidic foods), மற்றொன்று காரஉணவுகள் (Alkaline foods). கார உணவுகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்றால் அதற்கு பச்சையான உணவுகள் சாப்பிடும் பொழுதுதான் அந்த பலனைப் பெற முடியும். இயற்கையான காய்கறிகளை அரைவேக்காட்டில் வேகவைத்து சாப்பிடுவது காரஉணவில் சேரும். அதேபோல் அரிசி சார்ந்த உணவுகள், பருப்புகள் நிறைய சேர்த்துக்கொள்வது, இயல்பான சாம்பார், ரசம், மோர், புளிக்குழம்பு இப்படியெல்லாம் சாப்பிடுவது எல்லாமே அமில உணவுகளில்தான் சேரும். இயற்கையாக எடுக்கக்கூடிய உணவுகள் முளைக்க வைத்த பயறுகள், தானியங்கள் எல்லாமே காரஉணவுகளில் சேரும். காரஉணவில் ஆக்சிஜன் அதிகமாக கிடைக்கும், பிராணசக்தி அதிகமாக கிடைக்கும். பிராண மூலக்கூறுகள் அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வருகிறபொழுது சுவாசமண்டலக்கோளாறுகள் அனைத்தும் சரியாகும். சுவாசமண்டலம் ஒழுங்காக இருக்கும் பொழுதுதான் சுவாசம் நிலைக்கக்கூடிய தன்மை இருக்கும். சுவாச மண்டலக்கோளாறு ஒருவருக்கு வரஆரம்பித்துவிட்டது என்றால் நிரந்தரமாக சளி இருக்கலாம், இருமல், தும்மல், மூக்கடைப்பு, sinusitis என்று சொல்லக்கூடிய நீர்கோர்வை வியாதிகள், காசநோய், ஆஸ்மா போன்ற நோய்கள் எல்லாமே சுவாச மண்டலப் பிரச்சனைகளாலே வரும்.
சாதாரணமாக ஆஸ்துமா வந்திருக்கிறது என்றால் கூட உணவுமுறைப் பழக்கத்தினால் மிக எளிதில் சரிசெய்ய முடியும். ஆஸ்துமா இருக்கக்கூடியவர்கள், சுவாச மண்டலப்பிரச்சனைகள் இருப்பவர்கள் மந்தமான பொருட்களை தவிர்க்க வேண்டும். செரிமான மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது. சுவாச மண்டலம் ஒழுங்காக வேண்டும் என்றால் தயிர், மோர் போன்ற குளுமையான உணவுப்பொருட்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர் போன்றவற்றை தவிர்க்கவேண்டும், காற்று பதனாக்கியிலேயிருந்து (Air conditioner) பழக்கப்படுத்துவதைத் தவிர்ப்பது இவையனைத்துமே சுவாசமண்டலத்தை மேம்படுத்தச் செய்யக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். அதேபோல் packing food, காரசாரமான உணவுப்பொருட்களை தவிர்ப்பது, Preservative கலந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, hair die, perfume பயன்படுத்துவது, அதிக மணம் இருக்கக்கூடிய வாசனை திரவியங்களை பயன்படுத்தாமல் இருப்பது இவையனைத்தும் சுவாச மண்டலத்தை மேம்படுத்துவதற்கு நாம் செய்யக்கூடிய தடுப்புமுறைகளாக இருக்கும்.
சுவாசமண்டலம் சார்ந்துதான் ஒவ்வாமை அதிகமாகும். நம் உடம்பில் ஒவ்வாமைக்கூறுகள் அதிகமாகிவிட்டது என்றால் நீங்கள் சாப்பிடக்கூடிய சில உணவுப்பொருட்களில் கூட ஒவ்வாமை உண்டு பண்ணும். ஒரு சிலருக்கு வாழைப்பழம் ஆகவே ஆகாது, ஆனால் ஒரு சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட்டாலும் ஒன்றுமே செய்யாது. உடல்கூறை மாற்றக்கூடிய தன்மை ஒவ்வாமை கூறுக்கு உண்டு. ஒவ்வாமைக்கூறுகள் எதில் எல்லாம் இருக்கிறதோ அவற்றை முழுமையாக தவிர்த்துவிட்டு நம் உடம்பில் இரத்தத்தை அதிகப்படுத்துவது, செரிமானத்தை அதிகப்படுத்துவது போன்றவற்றை செய்துகொள்ளமுடியும். செரிமானக்கோளாறு இல்லாத உடம்பையும், இரத்த ஓட்டத்தை ஒழுங்காக முறையாக்கி இரத்த அளவை அதிகப்படுத்தி ஒரே சீராகக் கொண்டு வந்தால் சுவாசம் நிலைக்கும். சுவாசம் அப்பொழுதுதான் நிலைப்புத் தன்மைக்குப் போகும். சுவாசத்தை ஒழுங்காக நிலைப்புத் தன்மைக்குக் கொண்டுவரவேண்டும் என்றால் நல்ல தேர்ந்தெடுத்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதனடிப்படையில் செரிமான மண்டலம் வலுவாகும். அதேபோல் நல்ல தேர்ந்தெடுத்த உணவுகளை எடுத்து இரத்தத்தை அதிகப்படுத்தும் பொழுது இரத்த ஓட்டமண்டலம் சீராகும் பொழுது நம்முடைய சுவாசமண்டலம் ஒரே சீராக இருக்கும். உடல் நிலைப்புத்தன்மை உடையதாக இருக்கும்.
ஆக ஒரு மனிதனுக்கு எலும்பு, நரம்பு, தசை வலுவாக இருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு செரிமான மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், சுவாசமண்டலம் மிக வலுவாக இருக்க வேண்டும். இந்த ஆறு மண்டலமும் வலுவாக இருக்கிற பட்சத்தில்தான் உடல் நிலைப்புத்தன்மையுடன் ஆயுள் கெட்டி என்ற தன்மைக்கு உடம்பைக் கொண்டுவர ஆரம்பிக்கும். ஆக ஒருமனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும் சீராக வாழவேண்டும் என்றால் இந்த ஆறுமண்டலமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமானது, அத்தியாவசியமானது. உடல்நலம் பேணக்கூடிய நம்முடைய முறைகள் அடிப்படையில்தான் இந்த ஆறு மண்டலங்களை வலுப்படுத்த முடியும்.
தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவது, மதுவுக்கு அடிமையாவது, மாதுக்கு அடிமையாவது, புகை-போதைக்கு அடிமையாவது, வாழ்வியல் முறைகளை முழுமையாக மீறுவது, இதனடிப்படையில் உடல் தேய்வு, உடல் சோர்வு, உடல் தளர்வு, உடல் அழிவு எல்லாமே உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆக இந்த ஆறு மண்டலங்களை ஒரு சராசரி மனிதன் மேம்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியம் என்பது நிலைக்கக்கூடிய தன்மை இருக்கும். இந்த ஆறு மண்டலங்களையும் வலுப்படுத்த அறுசுவை உள்ள இயற்கை உணவுகளாலும், சைவ உணவுகளாலும் மட்டுமே சாத்தியமாகும். ஆக இந்த ஆறுமண்டலங்கள் அடிப்படையில்தான் நம்முடைய நாளமில்லா சுரப்பு மண்டலம், கழிவு மண்டலம், இனப்பெருக்க மண்டலம் எல்லாமே செயல்படும். நாளமில்லா சுரப்பு மண்டலத்தின் பணிகள் என்ன?, அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?, கழிவு மண்டலத்தை ஒழுங்குபடுத்த, முறைப்படுத்த அதை சீராக்க என்னென்ன உணவுகளை சாப்பிடவேண்டும்?, எப்படி பேணி பாதுகாக்கவேண்டும்?, அடுத்து ஆணுக்கும் பெண்ணுக்குமான இனப்பெருக்கம் என்பது மனித சுழற்சிக்கு, வாழ்வியல் சுழற்சிக்கு, சமூக சுழற்சிக்கு எவ்வளவு அத்தியாவசியமானது?, என்பதையெல்லாம் அடுத்து வரக்கூடிய கட்டுரைகளில் நாம் தெள்ளத்தெளிவாகப் பார்ப்போம்.
நன்றி