20160302

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி - 9




மலபந்தம் மனபந்தம் என்று நான் சொல்லியிருந்தேன். கழிவுமண்டலத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கிறது என்றால் அது மனதை பாதிக்கும், மனது பாதிக்கப்படுகிற பொழுது ஒரு மனிதனுக்கு மனஅழுத்தம், மனஉளைச்சல், மனவேதனை, தூக்கமின்மை போன்ற பல்வேறு மனம் சார்ந்த நிறைய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதற்குக் காரணம் கழிவுமண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்.
மனம் என்பது எதை சார்ந்தது என்று பார்க்கின்ற பொழுது, முதலில் மனம் என்பது நம் உடம்பில் எங்கு இருக்கிறது என்று இதுவரையிலும் சொல்ல இயலாத நிலை உள்ளது. மனம் என்பது அறிவு என்றுதான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் மனம் மூளையைச் சார்ந்தது. மூளை எந்த அளவிற்கு வலுவாக, திடமாக, தெளிவாக இருக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் ஒருவருடைய மனதை நாம் எடைபோட முடியும். மனம் என்பது மூளையோடு தொடர்புடையது என்ற அடிப்படையில்தான் நாம் நோக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இந்த மூளையை ஒழுங்காக முறையாக செயல்படவைக்கக்கூடிய தன்மை நம் உடம்பிலுள்ள நாளமில்லா சுரப்பிகளுக்கு உண்டு. நம் உடம்பையே முழுமையாக செயல்படுத்தக்கூடிய நிலை இந்த நாளமில்லா சுரப்பிகளுக்கு உண்டு. நரம்புமண்டலம், எலும்பு மண்டலம், தசை மண்டலம் இந்த மூன்று மண்டலங்களின் தன்மையோடு கட்டப்பட்ட உடலானது இரத்த ஓட்ட மண்டலத்தாலேயும், செரிமான மண்டலத்தாலேயும், சுவாசமண்டலத்தாலேயும் பேணப்பட்டு மலக்கழிவுகள் கழிவுமண்டலத்தால் வெளித்தள்ளப்பட்டு, அதற்கு அடுத்து அந்த உடலை நிலைகொள்ளச்செய்யும் தன்மை நாளமில்லா சுரப்பிகளுக்கும், இனப்பெருக்கமண்டலத்திற்கும்தான் உண்டு என்பதுதான் இதன் காரணமாகும்.
நாளமில்லா சுரப்பி (Endocrine glands):
நாளமில்லா சுரப்பிகள் நம் உடம்பில் நிறைய இருக்கிறது. அதில் மிக முக்கியமானது என்று பார்க்கும்பொழுது பிட்யூட்டரி சுரப்பி (Pituitary gland). இது மூளைக்கு அருகில் பீன்ஸ் மாதிரி இருக்கிற சிறு உறுப்பு. இதன் அளவு அரை கிராம் அளவிற்குத்தான் உண்டு. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான வளர்ச்சியை அதிகப்படுத்துவதுதான் இதன் தன்மை. உடல் நன்றாக வளரக்கூடிய தன்மை, உயரமாகக்கூடிய தன்மைகளை பிட்யூட்டரி சுரப்பியால்தான் அளவிட முடியும். உடலை வளர்சிதை மாற்றத்திற்குக் கொண்டுபோகக்கூடிய தன்மை பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கக்கூடிய அந்த ஹார்மோனால்தான் அது சாத்தியமாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் சார்ந்த எண்ணத்தை, விருப்பத்தைக் கொண்டுவருவதும் இந்த பிட்யூட்டரி சுரப்பிதான்.
தைராய்டுசுரப்பி:
தைராய்டு என்று சொல்லக்கூடிய சுரப்பி தைராக்ஸின் என்று சொல்லக்கூடிய ஹார்மோனை சுரக்கும். இந்த தைராக்ஸின் ஹார்மோன் குறைவாக சுரந்தாலும் அல்லது அதிகமாக சுரந்தாலும் பிரச்சனைகள் வரும். அதைத்தான் ஹைபோதைராய்டிசம் (hypothyroidism), ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism) என்று இரண்டு வகையாக சொல்லலாம்.
ஹைபோ தைராய்டிசம் (hypothyroidism):
தைராய்டு குறைவாக சுரக்கக்கூடிய தன்மை அதாவது ஹைபோ தைராய்டிசம் வந்தது என்றால் பல்வேறு பிரச்சனைகள் வரும். உடல் அசதியாக இருப்பது, சோர்வாக இருப்பது, உடல் ஊதிக்கொண்டே செல்வது, கன்னம் வீங்குவது, கால் வீங்குவது, ஒரு பத்து நிமிடம் கூட ஒரு வேலையை செய்யமுடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் வரும். மேலும் நிறைய பெண்கள் இந்தக் குறைபாட்டினால் அவதிப்படுவார்கள், அதாவது மாதவிடாய் வராமலிருப்பது, அவ்வாறு வந்தாலும் கூட அதிகமாக இருப்பது இவையனைத்தும் ஹைபோ தைராய்டிசம் இருப்பவர்களுக்கு வரும் பிரச்சனைகள்.
ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism):
தைராய்டு அதிகமாக சுரக்கக்கூடிய தன்மை அதாவது ஹைபர் தைராய்டிசம் வந்தது என்றால் மனம் சார்ந்த பிரச்சனைகள், மன ஆவேசம், மன அழுத்தம், தலைமுடி முழுமையாக கொட்டிப் போவது, கண்பார்வையில் பிரச்சனை வருவது, கழுத்து எலும்பில் வலி வருவது, முதுகெலும்பு வலிப்பது, இடுப்பு எலும்பில் வலி இருப்பது, சிறிது தூரம் கூட நடக்கமுடியாமல் இருப்பது, மூச்சுத்திணறுதல் இவையனைத்தும் ஹைபர் தைராய்டிசம் இருப்பவர்களுக்கு வரும் பிரச்சனைகள்.
தைராக்ஸின் ஹார்மோன் முறையாக சுரந்தால்தான் பெண்களுக்கு பிரச்சனையே இல்லாத சூழல் இருக்கும். பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் என்பது மாதாமாதம் முறையாக வருகிறபொழுதுதான் நல்ல பலன் இருக்கும். ஆனால் தைராக்ஸின் குறைபாடு உள்ள பெண்களுக்கு மாதாமாதம் வருவதில்லை. நம் உடம்பில் நாளமில்லா சுரப்பிகளில் தைராய்டு ஹார்மோனுக்கென்று ஒரு தனி இடம் உண்டு.
அட்ரினல் சுரப்பி (Adrenal gland):
அட்ரினல் சுரப்பியிலிருந்து (Adrenal gland) அட்ரினலின் என்ற நாளமில்லா சுரப்பி உண்டாகும். நாம் ஏதாவது சாலையைக் கடக்கின்றோம் எதிரே ஒரு பேருந்து வருகிறது, இந்தப் பேருந்து வருவதற்கு முன்னால் வேகமாக சாலையைக் கடக்கவேண்டும் என்ற எண்ணத்தை, ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய தன்மை இந்த அட்ரினலினுக்கு உண்டு. அந்த வேலையை செய்து நம் உடம்பை நீட்டிக்கச் செய்யக்கூடியத் தன்மையை இந்த அட்ரினலின் செய்யும்.
அடுத்து கணையம் சுரக்கக்கூடிய இன்சுலினைப் பற்றிப் பார்ப்போம்.
கணையம்(Pancreas):
கணையம் என்பது நம் உடம்பில் இருக்கக்கூடிய ஒரு உறுப்பு. அதில் இருக்கக்கூடிய ஆல்பா, பீட்டா திட்டுக்களில் இன்சுலின் என்று சொல்லக்கூடிய ஒரு ஹார்மோன் சுரக்கும். இந்த இன்சுலின் ஹார்மோன் என்பது ஒரு வகையான இனிப்பு நீர் என்று சொல்லலாம். ஒரு ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இன்சுலின் சுரப்பு ஒழுங்காக முறையாக இருக்கும் பொழுதுதான் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் உள்ள சக்கரை சத்துக்கள் ஒழுங்காக முறையாகப் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து நம் உடம்பில் இருக்கக்கூடிய செல்களை புத்தாக்கம் செய்கிறது. இந்த இன்சுலின் சுரப்பு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சுரக்க ஆரம்பிக்கிற பொழுது சர்க்கரை குறைபாடு வருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் ஹார்மோன் மிக முக்கியமானது. இன்சுலின் ஹார்மோன் குறைந்தது என்றால் அதிதாகம், அதிசிறுநீர், நீர் எரிச்சல், சிறுநீர் தாரைகளில் புண்ணாவது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உலகளாவிய அளவில் இன்று சர்க்கரை வியாதி இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அதில் இந்தியாதான் உலகிலேயே முதன்மையான நாடாக திகழ்கிறது. அதில் முதன்மையான இடம் தமிழ்நாட்டிற்கு உண்டு, தமிழ்நாட்டிலே சர்க்கரை வியாதிக்கான முதன்மையான இடம் சென்னைக்கு உண்டு. அந்த அளவிற்கு நம்முடைய உணவுமுறைகள் மாறிப்போன காரணத்தினால் நிறைய நபர்களுக்கு கணையம் சார்ந்த பிரச்சனைகள், இன்சுலின் போன்ற ஹார்மோன் குறைபாடுகள் மிக அதிகமாக வந்துகொண்டிருக்கிறது.
நம் உடம்பில் சுரக்கக்கூடிய ஹார்மோன்கள் எல்லாமே நம் உடம்பில் பிரதானமாக இருக்கக்கூடிய உறுப்புகளை பலப்படுத்தக்கூடிய வேலையை செய்கிறது. நம் உடம்பிலேயே மிகப் பிரதானமான உறுப்பு என்று பார்த்தோம் என்றால் மூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகம் இவைகள்தான். இவைகளைத்தான் சித்தர்கள் ராஜஉறுப்புகள் என்று சொல்வார்கள். ஒரு நோய்க்கு மருந்து கொடுத்தோம் என்றால் அந்த நோய்க்கு மருந்து கொடுப்பதை விட ராஜஉறுப்புளைப் பலப்படுத்துவதே மேல் என்று சித்தர்கள் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞானம் அடிப்படையில் உருவான நவீன மருத்துவம் நோய்க்கான அறிகுறியைக் கண்டறிந்து நோய்க்கான அறிகுறியை மட்டுமே அழிக்கக்கூடிய தன்மை இருப்பதனால்தான் ஒரு நோய் போனால் இன்னொரு நோய் வருகிறது. எப்பொழுதுமே நம் உடம்பில் இருக்கக்கூடிய பிரதான உறுப்புகள் ஒழுங்காக முறையாக ஆரோக்கியமாக இருக்கக் கூடிய பட்சத்தில் பெரிய நோய்கள் எதுவுமே வருவது கிடையாது. மூளையை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், சிறுநீரகத்தை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், கல்லீரலை பலப்படுத்துவது நாளமில்லா சுரப்பிகள், இதயத்தை பலப்படுத்துவதும் நாளமில்லா சுரப்புகள் இதில் எந்த விதமான ஐயமும் கிடையாது. இப்பொழுது சிறுநீரகத்திற்கு வருவோம்.
சிறுநீரகம்(Kidneys):
சிறுநீரகத்தில் இரண்டுவிதமான நாளமில்லா சுரப்பிகள் உண்டு. ஒன்று எரித்ரோபாய்டின் (Erythropoietin), மற்றொன்று ரெனின் (Renin). ஒரு சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்து கழிவுமண்டல கழிவுகளை எல்லாம் முழுமையாக வெளியில் தள்ளவேண்டும் என்றால் அந்த எரித்ரோபாய்டின் என்று சொல்லக்கூடிய ஹார்மோன் மற்றும் ரெனின் என்ற சொல்லக்கூடிய ஹார்மோன்கள் முழுமையாக சுரக்கக்கூடிய கட்டத்தில் சிறுநீரகத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஒருவேளை இந்த இரண்டு ஹார்மோன்களும் பற்றாக்குறையாக இருந்தது என்றால் சிறுநீரகம் இயல்பாக இருக்கக்கூடிய அளவை விட சுருங்கிப்போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. சிறுநீரகத்தில் நீர்கட்டி, சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத்தைச் சுற்றி நீர் நீர்க்கோர்வை (hydronephrosis) போன்ற சிறுநீரகம் சார்ந்த வியாதிகள் சிறுநீரகம் உற்பத்தி செய்யக்கூடிய ஹார்மோன் பற்றாக்குறையால் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு கருப்பையில் (Ovary) சுரக்கக்கூடிய ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் (Estrogen). பெண்களுக்கு கருப்பையில் Estrogenஎன்று சொல்லக்கூடிய ஹார்மோன் ஒழுங்காக முறையாக சுரந்தால்தான் மாதாமாதம் ஒரு கருமுட்டை உண்டாகி அது Fallopian tube வழியாக கர்ப்பப்பைக்குச்சென்று அந்த கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய Endometriumல் செல்லக்கூடிய செல்லக்கூடிய சூழல் இருக்கும். கருசுழற்சியும் உண்டாகக்கூடிய சூழல் அங்குதான் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆக எந்த ஒரு பெண்ணுக்கு Estrogenசுரப்பு குறைவாக இருக்கிறதோ அந்தப் பெண்ணுக்கு முறையற்ற மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே இந்த Estrogen இருக்கக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து ஒரு பெண் சாப்பிடுகிற பொழுது கண்டிப்பாக நல்ல பலனைப் பெறமுடியும்.
ஆண்களுக்கு, ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு நாளமில்லா சுரப்பி எதுவென்றால் Testosterone. இந்த Testosterone என்பது ஆண்களின் விதையில் உற்பத்தியாகும். அந்த விதையை கவனமாக அடிபடாமல் பேணிப் பாதுகாக்கச் சொல்வதற்கான காரணம் என்னவென்றால் இந்த விதையில் ஒரு ஆண்மைக்கான நாளமில்லா சுரப்பி உற்பத்தியாகக்கூடியது. எந்த ஒரு ஆணுக்கு நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக முறையாக உற்பத்தியாகிறதோ அந்த ஆணுக்குத்தான் மீசை முளைக்கிறது, ஆண்மைத் தன்மை வருவது, விரைப்புத்தன்மை வருவது, நெடுநேரம் கலவியில் புணரக்கூடிய தன்மை வருவது எல்லாமே Testosterone-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த Testosterone ஒழுங்காக முறையாக சுரக்கின்ற பொழுதுதான் ஒரு ஆணுடைய விந்துவிலும் விந்தணுக்கள் தேவையான அளவு இருக்கும். விந்துவில் கிட்டத்தட்ட 60 மில்லியன் உயிரணுக்கள் இருக்கவேண்டும், அதில் வேகமாக நீந்தக்கூடிய உயிரணுக்கள் 70 சதவீதமாவது இருக்கவேண்டும். விந்தணுக்களில் சீழணுக்கள், இரத்த அணுக்கள் இவைகள் இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த சீழணுக்களும் இரத்த அணுக்களும் விந்தை முழுமையாக அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. அதுவெல்லாம் இல்லாத அளவிற்கு இருக்கவேண்டும், ஆரோக்கியமான விந்தணுக்கள் வெளிப்படவேண்டும், உடலுறவில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், அதிகநேரம் புணரவேண்டும், இரவுநேரத்தில் விந்து உமிழ்தல் இருக்கக்கூடாது என்றால் ஒரு ஆணுக்கு Testosterone ஒழுங்காக இருக்கவேண்டும், அந்த Testosterone உற்பத்தியாகக்கூடிய விதைகள் ஒழுங்காக இருக்கவேண்டும். இந்த இடத்திலும் ஒரு ஆண் தன்னுடைய ஒழுக்கநிதியை மீறும்பொழுது அதாவது அடிக்கடி சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடும் பொழுது விதைகள் சேதாரம் ஆவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. விதைகளுக்குள் varicocele தாக்குதல் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. varicocele வந்தது என்றால் விதைகளில் உற்பத்தியாகக்கூடிய Testosterone என்று சொல்லக்கூடிய ஹார்மோன் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்கின்ற எண்ணம் ஆண்களுக்கு இல்லாமல் போய்விடும், பெண்ணைப் பார்த்தாலே பயம், திருமணம் செய்வதற்கு பயம் இவ்வாறான பய உணர்வுகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எப்பொழுதுமே நாளமில்லா சுரப்பி மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஹார்மோன்களும் தேவையான அளவு தேவையான நேரத்தில் ஒழுங்காக முறையாக சுரக்க ஆரம்பித்தால்தான் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தை, நல்வாழ்வை பேண முடியும்.
சில ஹார்மோன்களில் மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாளமில்லா சுரப்பிகள் நிறைய இருக்கிறது. அதில் விசேசமாக நாம் சொல்லவேண்டும் என்றால் endorphin. ஒரு ஆணோ பெண்ணோ தனக்குப் பிடித்தவர்களோடு கலவியில் ஈடுபடுகிற பொழுது endorphinஎன்று சொல்லக்கூடிய ஹார்மோனை மூளை சுரக்கும். ஒரு இனம் புரியாத சந்தோசத்தை, இனம் புரியாத திருப்தியை ஆணுக்கும் கொடுக்கும், பெண்ணுக்கும் கொடுக்கும். இதை செய்வதும் அந்த நாளமில்லா சுரப்பிதான். அதேபோல் ஒரு பெண் கருவுற்று தாய்மையடைந்து குழந்தைப்பேறு உண்டாகி, அந்தக் குழந்தைக்கு பாலூட்டும்பொழுது இனம் புரியாத பரவசம், இனம் புரியாத இன்பத்தை தாய்க்கு தன்னுடைய குழந்தை மூலம் கொடுக்கக்கூடிய தன்மை இந்த நாளமில்லா சுரப்பிக்கு உண்டு. அதைத்தான் lactationஎன்று சொல்லுவோம். பால் அதிகமாக உற்பத்தியாவதை நிர்ணயிக்கக்கூடிய தன்மை ஹார்மோனுக்குத்தான் உண்டு, அதில் விசேசமாக நாம் சொல்வது பிட்யூட்ரி. பிட்யூட்ரி சுரப்பியிலிருந்து உண்டாகக்கூடிய நாளமில்லா சுரப்பி அதாவது prolactin ஹார்மோன் தாய்ப்பாலை அதிகப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் ஒழுங்காக முறையாக சரியான முறையில் சுரக்கிறபொழுதுதான் ஒரு ஆண் ஆணுக்கான அடையாளத்துடனும், ஒரு பெண் பெண்ணுக்கான அடையாளத்துடனும் இருக்க முடியும்.
அடுத்த இதழில் இப்பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய உணவுகளைக் காண்போம்.
-தொடரும்

No comments: