20160303

நீரிழிவு

. மேகநாதத் தைலம்


புங்கம் பட்டை அழிஞ்சிப் பட்டை பிராயம் பட்டை எட்டிப் பட்டை மாம் பட்டை ஒதியம் பட்டை இலுப்பைப் பட்டை சங்கம் பட்டை புரசம் பட்டை சுரப் புன்னைப் பட்டை
நூற்றாண்டு வேம்பின் பட்டை
ஊழலாத்திப் பட்டை
முதிர்ந்த பூவரசன் பட்டை
நிலவிளாப்பட்டை சிவனார் வேம்புப் பட்டை


இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்


ஆடுதீண்டாப்பாளைச் சாறு கழற்கொடிச் சாறு சங்கன் குப்பிச் சாறு செருப்படைச் சாறு கொட்டைக் கரந்தைச் சாறு பொடுதலைச் சாறு


இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு,


சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு,


மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.


அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.


தீரும் நோய்: கால், கை முடக்கு முதலான வாத நோய்கள் புற்று தோல் நோய்கள் அரையாப்பு நீராம்பல் பெருவயிறு பாண்டு மதுமேகம் போன்றவை குணமாகும்.


பத்தியம்: உப்பு மொச்சை பாசிப்பயறு துவரை முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம்.


நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.

-சித்த வைத்திய திரட்டு




2 . அப்பிரகப் பற்பம்

சுத்தி செய்த கிருஷ்ணா அப்பிரகம் 1 பலத்தை
ஒரு பாத்திரத்தில் இட்டு மருதோன்றி வேர் 16 பலத்தை இடித்து வேறொரு பாண்டத்தில் இட்டு, 64 பலம் தண்ணீர் விட்டு, அடுப்பேற்றிச் சிறுக எரித்து
4-இல் 1 பங்கான 16 பலமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு,
நாளோன்றுக்கு 2 பலம் வீதம் அந்த அப்பிரகத்தில் 8 நாள் வார்த்து ஊற வைத்து நிழலில் உலர்த்தவும்.

அது நன்றாய் உலர்ந்த பிறகு, அந்த அப்பிரகத்தை நிறுத்து அப்போதிருக்கும் எடைக்கு 2 பங்கு கடப்பம் பிசின் சேர்த்து, அந்த 2 பங்கு பிசின் ஆறி ஒரு பங்காய் குறைந்த பிறகு, முன்போல நாள் ஒன்றுக்கு 2 பலம் வீதம் குப்பை மேனிச் சாற்றை 8 நாள் வரைக்கும் விட்டு ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.

உலர்த்திய பின் அந்த அப்பிரகத்தை கல்வத்தில் இட்டு, அப்பிரக எடைக்கு 2 பங்கு வேப்பெண்ணெய் தினமும் விட்டு, அப்படி 6 நாள் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தும் போது, வில்லையை நிறுத்துக் கொண்டு, அந்த எடைக்குச் சரி எடை ஏறும்படி 3 நாள் வரைக்கும் அத்திப்பாலை அந்த வில்லைக்கு அடித்து உலர்ந்த பின் அதை அகலில் இட்டு சீலை செய்து 60 வறட்டியில் புடமிட்டு நன்றாக ஆறின பின்னர் எடுத்தால், வெண்மையாய் இருக்கும்.

அளவும் அனுபானமும்: இப்பற்பத்தை 1 முதல் 2 குன்றியளவில் நெய்யிலாவது, வெற்றிலைச் சாற்றிலாவது அனுபானித்து 1 மண்டலம் வழங்கலாம்.தீரும் நோய்கள்: நீரிழிவு நோய் பிளவை மகோதரம் உன்மாதம் சுரம் விரைவாதம் முதலியன நீங்கும்.


பத்தியம்: புளி, புகையிலை, பெண்போகம், கடுகு, மதுபானம், அகத்திக்கீரை ஆகியவற்றை நீக்க வேண்டும்.

தீர்வு: சரியான முறையில் சுத்திகரித்துத் தயார் செய்த இப்பற்பம் எவ்விதத் தீங்கும் விளைவிக்காது. சுத்தியோ, செய்முறையோ சரியாக இல்லாவிடின் மருந்தீட்டால் உண்டாகும் கெடுதி போல துன்பம் விளைவிக்கும். அதுசமயம் மறுதோன்றி சுக்குக் குடிநீர் அருந்தினால் அத்துன்பம் நீங்கும்.

-சித்த வைத்திய திரட்டு




3 . பிரமேகத்திற்கு குடிநீர்


வேப்பம் பட்டை ஆமலகத்தோடு பேய்ப்புடல் சீந்தில்


இவைகளைச் சம அளவெடுத்துக் குடிநீர் செய்து தேன் விட்டு உட்கொள்ளப் பித்தப் பிரமேகம் தீரும்.

-ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்



4 . பிரமேக நோய்க்கு குடிநீர்


ஆவாரை வேர்ப்பட்டை வேம்பு மருது கருங்காலி வேங்கை கடலிராஞ்சி இவைகளின் பட்டை முருங்கை வித்து கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் முத்தக்காசு பொன் முசுட்டை தேற்றான் கொட்டை


இவைகளை உடனுக்குடனே குடிநீர் செய்து தேன் விட்டு உட்கொள்ள பிரமேகம் தீரும்.

-ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்



5 . வேப்பன் பிசின் சூரணம்


வெகு நாள் சென்ற வேப்ப மரத்தின் பிசினைக் காய வைத்து இடித்த தூள், வறுத்த சாமை அரிசி மாவு.


இவை இரண்டையும் சமமாகக் கலந்து வெருகடியளவு சூரணம் உட்கொள்ளலாம். காலை மாலை 2 வேளை 1 மண்டலம் உண்ணவும்.

தீரும் நோய்: நீரிழிவு குணமாகும்.

-மேக நிவாரணி போதினி

6 . மேகாதிக் குளிகை
உலர்த்தின இளந்தென்னம் பாளைப் பொடி மஞ்சள் கடுக்காய்த் தோல் நெல்லி முள்ளி தான்றிக்காய்த் தோல் - இவை வகைக்கு 8 பலம் பருத்திக் கொட்டைப் பருப்பு வெள்ளைக் குன்றிமணி பருப்பு புளியங்கொட்டைத் தோல் தேற்றான் கொட்டை சீவல் கற்கடக சிங்கி - வகைக்கு 2 பலம் நிலப்பனைக் கிழங்கு கறிமஞ்சள் மரமஞ்சள் கஸ்தூரி மஞ்சள் கொடிவேலி வேர்ப்பட்டை கருவேலம் பிசின் வெள்வேலம் பிசின் விளாம் பிசின் கருங்காலி பிசின் - வகைக்கு 6 1/4 வராகன் எடை வேப்பம் பிசின் 1/8 வராகன் எடை


இவை எல்லாவற்றையும் ஒன்றாக இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ளவும்.சுத்தி செய்த நெல்லிக்காய் கந்தகம் 3 1/4 பலம் சுத்தி செய்த இரசம் 1 பலம் கிருஷ்ணா அப்பிரகச் செந்தூரம் 1 1/4 பலம்


இரசத்தையும் கந்தகத்தையும் சேர்த்து, கறுத்து மை போலாகிற வரையில் அரைத்துப் பின்னர் மேற்படி அப்பிரகச் செந்தூரத்தைச் சேர்த்து அரைத்து முன் சித்தப் படுத்தின சூரணத்தையும் சிறுகச் சிறுகப் போட்டுச் சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்த பின்ன எடுத்து அம்மியில் வைத்து,ஆவாரம் சாற்றால் 1 நாளும் மருத இலைச் சாற்றால் 1 நாளும் இலந்த இலைச் சாற்றால் 1 நாளும் அரைத்து, இலந்தைக் காயளவு உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.


அனுபானம்: வேளை 1க்கு ஒரு குளிகையாக தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

தீரும் நோய்: தினம் காலை மாலை 2 வேளையாக உண்டு வர நீரிழிவு தீரும்.

-மேக நிவாரணி போதினி



7 . கடலழிஞ்சில் பட்டை இலேகியம்

1 வீசை கடலழிஞ்சில் பட்டையைப் பஞ்சு போல் இடித்து ஒரு பாண்டத்தில் இட்டு 8 படி நீர் விட்டு 1 படியாக வற்றக் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

1 படி பருத்திக் கொட்டையை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் உரலில் இடித்து, அப்பால் ஆட்டுக் கல் உரலில் போட்டு நீர் தெளித்துக் குளவியைக் கொண்டு ஆட்டி வழித்தெடுத்துச் சீலையில் வைத்துப் பிழிந்து பால் வாங்கவும். மீண்டும் திப்பியை உரலில் ஆட்டி முன் போல் பால் வாங்கவும். இப்படி 1 படி பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின் உலர்ந்த வன்னியிலை அத்திப் பிஞ்சு ஆவாரம் பட்டை கசகசா சுக்கு வேப்பம் பட்டை கிராம்பு ஓமம் கொத்துமல்லி சாதிக்காய் சிறுநாகப்பூ ஏலம் சடாமாஞ்சில் கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் மரமஞ்சள் வகைக்கு பலம் ஒன்றாக, இடித்து சூரணம் செய்து வைத்துக் கொள்ளவும்.


பின் கடலழிஞ்சில் பட்டை கியாழத்தையும் பருத்திக் கொட்டைப் பாலையும் ஒரு பாத்திரத்தில் இட்டு, 2 வீசை வெள்ளைச் சர்க்கரையைப் போட்டுக் கரைத்து அடுப்பில் ஏற்றிப் பாகுபதம் வரும் சமயம் முன் சூரணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி கீழ் இறக்கிப் போதிய அளவு நெய், தேன் விட்டு கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.

அளவு: இந்த இலேகியத்தை அந்தி சந்தி கழற்சிக்காய் அளவு கொடுத்து வரவும்.

தீரும் நோய்: மதுமேகம், நீரிழிவு நீங்கும்.

-சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம்

8 . கோமூத்திரச் சிலாசத்து

இது வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து. இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச் சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில் இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த ரகமானதாகும்.

அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப் பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில் ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது உண்டு.

அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.

ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.தீரும் நோய்: மதுமேகம் கல்லடைப்பு ஈரல் நோய்கள் குன்மம் பெரும்பாடு முதலியன நீங்கும்.

No comments: